நல்ல உள்ளம்!
தீபாவளியன்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். அந்த தெருவில் வசித்த வேலனும், ராமுவும் ஒரே வகுப்பில் படித்தனர். 'கொஞ்சம் பட்டாசு தருகிறாயா...' என்றான் ராமு.மறுத்த வேலன், 'உங்க அம்ம கிட்ட வாங்கு...' என்றான்.'அவங்க வீட்டு வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துறாங்க... பட்டாசு வாங்க பணம் எல்லாம் கிடையாது...''எங்கம்மா மட்டும் என்ன ஆபிசரா...''சரி... பட்டாசு தர வேணாம்... நீ வெடிப்பதை வேடிக்கையாவது பாக்கிறேன்...''சரி... பாதுகாப்பா ஒதுங்கி நில்லு...'மகா கர்வத்துடன், பட்டாசுகளை வெடித்தான் வேலன். பார்த்து ரசித்தான் ராமு.ஒரு வெடிக்கு தீ வைத்த போது, புகைந்து அணைந்தது. உடனே அடுத்த வெடிக்கு தீ வைக்க முயன்றான். பழைய வெடி, நெருப்பு உமிழ ஆரம்பித்தது.பாய்ந்து வந்து வேலனை தள்ளி விட்டான் ராமு.எதிர்பாராத விபத்தால் ராமுவின் உடல் முழுக்க தீக்காயம்.அக்கம் பக்கத்தவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.தவறை உணர்ந்து, 'பட்டாசு தர மாட்டேன் என கூறியதற்கு மன்னித்து விடு...' என, கண்ணீர் மல்கினான், வேலன்.அரும்புகளே... கள்ளம் இல்லா மனதுடன் உதவி செய்து வாழ வேண்டும்.