பச்சை கயிறு!
முன்னொரு காலத்தில், கீழாநெல்லி என்னும் கிராமத்தில், சுதாகர் என்பவன் வாழ்ந்து வந்தான். பல ஆண்டுகள் அவன் அந்த ஊரை விட்டு வெளியே சென்றதே இல்லை. அன்றுதான் வேலைத் தேடி தலை நகரத்தை அடைந்தான்.குடிசையையே பார்த்திருந்த சுதாகர், அங்கிருந்த மாட மாளிகைகளைப் பார்த்து திகைப்படைந்தான்.எல்லா வீதிகளிலும் கூட்டம், கூட்டமாக மக்கள் செல்வதை பார்த்தான். அவன் உள்ளத்தில் அச்சம் புகுந்தது.'ஐயோ! இந்தக் கூட்டத்தில் நான் தொலைந்து விட்டால் என்ன செய்வேன். தொலைந்து போன என்னை யார் கண்டுபிடித்துத் தருவர்? என்னைத் தெரிந்தவர்கள் யாரும் இங்கு இல்லையே... என்ன செய்வேன்' என்று குழப்பம் அடைந்தான்.இந்தக் குழப்பத்தில் அவன் எங்கும் சென்று வேலை தேடவில்லை. என்ன செய்வது என சிந்தித்தபடி இருந்தான். அந்த இடத்தை விட்டு அவன் சிறிதும் அசையவில்லை.சிந்திக்க, சிந்திக்க அவன் குழப்பம் அதிகமானது.இரவுப் பொழுது வந்தது. வீதியில் கூட்டம் குறைய துவங்கியது.மக்கள் அதிகம் இல்லை என்பதை அறிந்ததும் அவன் அச்சம் சிறிது குறைந்தது.மெல்ல நடந்த சுதாகர் ஒரு சத்திரத்தை அடைந்தான். அங்கே நிறைய பேர் படுத்திருந்தனர். இரவு இங்கேயே தங்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தான்.இப்போது அவனுக்குப் புதிய குழப்பம் தோன்றியது.'இரவில் தூங்கும் போது நான் தொலைந்து விடுவேனே. விழித்ததும் என்னை யார் கண்டுபிடித்துத் தருவர்? தொலைந்து போன என்னைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி உள்ளதா?' என்று சிந்தித்தான்.சத்திரத்துக்காரரிடம் சென்று தன் குழப்பத்தை சொன்னான்.''நான் தொலைந்து போனால் என்னைக் கண்டுபிடிக்க நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும்,'' என்றான்.'இவன் சரியான முட்டாளாக இருக்கிறானே... இவனுக்கு எதையும் புரிய வைக்க முடியாது' என்று நினைத்த சந்திரக்காரர், ''இப்படித் தொலைந்து போகிறவர்களைக் கண்டு பிடிக்க இங்கே எளிய வழி உள்ளது,'' என்றார்.''என்ன வழி? சொல்லுங்கள்,'' என்று ஆர்வத்துடன் கேட்டான் சுதாகர்.பச்சை வண்ணக் கயிறு ஒன்றை அவனிடம் தந்து, ''இந்தக் கயிற்றை உன் வலது காலில் கட்டிக் கொண்டு படு. விழித்ததும் உன் காலைப் பார். இந்தக் கயிறு உன் காலில் இருக்குமானால் அது நீதான். நீ எங்கும் தொலைந்து போகவில்லை என்று தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.''ஐயா! நல்ல வழி கூறினீர். நன்றி,'' என்ற அவன், அந்தக் கயிற்றைத் தன் காலில் கட்டிக் கொண்டான்.அங்கேயே படுத்து நன்றாகத் தூங்கினான்.நள்ளிரவில் அங்கு படுக்க வந்தான் இன்னொருவன்.சுதாகரின் காலில் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பார்த்தான். அந்தக் கயிற்றை அவிழ்ந்து அதைத் தன் காலில் கட்டியவாறு சுதாகரின் அருகில் படுத்துத் தூங்கத் துவங்கினான்.பொழுது விடிந்தது.விழித்த சுதாகர் தன் காலைப் பார்த்தான். கயிறு இல்லாததைக் கண்டு, அவன் சுற்றும், முற்றும் பார்த்தான்.அருகிலிருந்த இன்னொருவன் காலில் அந்தக் கயிறு இருப்பது தெரிந்தது.'என் காலில் கயிறு இல்லை. நான் தொலைந்து போய் விட்டேன். இவன் காலில் கயிறு உள்ளது. தொலைந்து போன நான் கிடைத்து விட்டேன். நான் சுதாகரா? கயிற்றைக் காலில் கட்டியுள்ள இவன் சுதாகரா? ஒன்றும் புரியவில்லையே...' என்று குழம்பினான்.காலில் கயிற்றுடன் படுத்திருந்த அவனைத் தட்டி எழுப்பினான்.தூக்கம் கலைந்ததால் கோபம் கொண்ட அவன், ''எதற்காக என்னை எழுப்பினாய்?'' என்று கத்தினான்.''ஐயா! பச்சைக் கயிறு உங்கள் காலில் கட்டப் பட்டு உள்ளது. அப்படியானால் நீங்கள்தான் நான். உங்களுடன் பேசும் நான் யார்? உண்மையைச் சொல்லுங்கள்,'' என்றான் சுதாகர்.'ஐயையோ... விளையாட்டுக்கு இவன் காலில் கட்டியிருந்த கயிற்றை கழட்டி நம் காலில் கட்டிக் கொள்ளப் போக, இவன் சரியான பைத்தியம் போலிருக்கே... தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டதால் வந்த பிரச்னை இது' என நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.