உடல்நலம் பழகு!
நோய் ஏற்படுவதற்கு காரணம், பாக்டீரியா, பூஞ்சை மட்டுமல்லாது உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதும் ஆகும். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் முக்கிய இடத்தை பிடிப்பது கொய்யா. வைட்டமின் சத்துக்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது. வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன.ஆரஞ்சுப் பழத்தை விட, நான்கு மடங்கு, 'வைட்டமின் - சி' சத்து கொய்யாப் பழத்தில் உள்ளது. இது நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.சோடியம் மற்றும் பொட்டாஷியம் சத்து அளவை உடலில் மேம்படுத்துகிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மலச் சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது.பார்வைத் திறன் அதிகரிக்க உதவுகிறது. கொய்யாப் பழத்தில், 'வைட்டமின் - பி 9' என்ற போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களின் நலத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கொய்யாப் பழத்தில் நிறைந்துள்ள மெக்னீஷியம் சத்து, உடல் தசை மற்றும் நரம்புகள் சிறப்பாக இயக்க உதவுகிறது.எனவே, கடின உடல் உழைப்பு அல்லது நீண்டநேரம் அலுவலக வேலை செய்த பின், உட்கொள்ளும் கொய்யாப்பழம் உடல் தசைகளை ஓய்வெடுக்க வைக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து, சுயமாக இயங்கும் ஆற்றலை கொடுக்கிறது. கொய்யாப் பழத்தில், 'வைட்டமின் - பி 3' மற்றும் 'பி 6' சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, 'நயசின்' மற்றும் 'பைரிடாக்சின்' என அழைக்கப்படுகின்றன. மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டைத் துாண்டுகிறது.இந்த பழத்தில் கொழுப்பு சத்து இல்லை. எளிதில் செரிமானம் அடையும் கார்போ ஹைட்ரேட் மிகக் குறைந்த அளவில் உள்ளது. மதிய உணவில் கொய்யாப் பழத்தைச் சேர்த்துக் கொண்டால், மாலை வரை பசி உணர்வே ஏற்படாது. கொய்யா சாப்பிட்ட உடன், தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். குடித்தால் தொண்டை வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.- மு.சுகாரா