வீர தழும்பு!
கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 11ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியர் எம்.சி.மாணிக்கவாசகம், வித்தியாசமாக பாடம் நடத்துவார். கல்வி அலுவலகத்தில் இருந்து, புரெஜக்டர், பிலிம் சுருள் வரவழைத்து, அறிவியல் ஆவணப் படங்களை திரையில் காட்டுவார். பாசமாக பழகி அறிவுரை கூறுவார். அவர் மீதிருந்த மரியாதையால், 'எலெக்டிவ்' பாடமாக வேதியியல் படித்தேன். அன்று ஆய்வகத்தில், 'ஹைட்ரஜன்' வாயு செய்முறை வகுப்பில் எதிர்பாராத விதமாக, கண்ணாடி குடுவை வெடித்து சிதறியது. கண்ணாடி துகள்கள் என் கழுத்தில் குத்தின.சற்றும் தாமதிக்காமல், கை குட்டையால் ரத்தத்தை துடைத்தார். மிதிவண்டியில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். பயந்து நடுங்கிய என்னிடம், 'இதெல்லாம் வீர தழும்புடா... எதிர்காலத்தில், பெரிய விஞ்ஞானியாக வருவாய்...' என நம்பிக்கை ஊட்டினார்.பயம் தெளிந்து, ஆர்வத்துடன் படித்து முன்னேறினேன்; அரசு பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். என் வயது, 67; பதைபதைப்பான சூழலிலும் நம்பிக்கை ஊட்டிய அந்த ஆசிரியரை இன்றும் நினைவில் கொண்டுள்ளேன்.- செ.வ.மதிவாணன், கள்ளக்குறிச்சி. தொடர்புக்கு: 94430 44723