வீரமும் ஏழ்மையும்!
கும்பகோணம், காமாட்சி ஜோசியர் தெரு, நகராட்சி துவக்க பள்ளியில், 1969ல், 5ம் வகுப்பு படித்தபோது, ஆசிரியராக இருந்தார் சங்கிலி. மிகவும் கோபக்காரர். எப்போதும், காக்கிச் சட்டை, வேட்டிதான் அணிந்திருப்பார்.அப்போது, சாரணர் படையில் சேர்ந்திருந்தேன். ஒருமுறை டவுன் உயர்நிலைப் பள்ளியில் சாரணர் முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, கோவலன் நாடகத்துக்கு ஒத்திகை நடந்தது. பாண்டிய மன்னனாக நான் நடித்தேன். மிகவும் பாராட்டினார்.ஏழைக் குடும்பத்தை சேர்ந்த நான், வேட்டியை சலவை செய்ய பணம் இன்றி தவித்துவந்தேன். மன்னன் வேடத்துக்கான அலங்கார பொருட்களைக் கடனாக வாங்கியிருந்தேன்.அன்று மாலை, மண் தரை மைதானத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. வசனம் பேசியபடி, கால் சலங்கையை என் மீது வீசினார் கண்ணகியாக நடித்த மாணவி. அது உடைந்து முத்துக்கள் சிதற நான், கீழே விழ வேண்டும். ஆனால், விழாமல் நாற்காலியிலேயே சாய்ந்து கொண்டேன்.எல்லாரும் கை கொட்டி சிரித்தனர். ஆசிரியர்கள் திட்டினர். அந்த ஆசிரியர் மட்டும் தனியாக அழைத்து, 'ஏன் இப்படி செய்தாய்... ஒத்திகையின் போது, வீரம் பொங்க தரையில் விழுந்தாயே...' என கேட்டார். வருந்தியபடியே, 'காசு கொடுத்து சலவை செய்த ஜரிகை வேட்டி, மண்ணில் பட்டு வீணாகப் போய் விடுமே என்ற கவலையில் தான் தரையில் விழ தயங்கினேன்...' என்று கூறினேன். சிறு புன்னகையுடன் என் முதுகில் தட்டி தேற்றினார். ஆறுதலாக உணர்ந்தேன்.என் வயது, 60; ஏழ்மையை புரிந்த அந்த ஆசிரியரின் செயல் இன்றும் மனதில் தங்கியுள்ளது.- சு.சுந்தரேசன், சென்னை.தொடர்புக்கு: 98400 80441