உள்ளூர் செய்திகள்

இளஸ்.. மனஸ்.. (82)

அன்பு பிளாரன்ஸ்... என் வயது, 40. மூன்று குழந்தைகளுக்கு தாய். மூத்தவளுக்கு வயது 17; பிளஸ் 2 படிக்கிறாள். இரண்டாமவளுக்கு வயது 15; 10ம் வகுப்பு படிக்கிறாள். கடைக்குட்டி மகனுக்கு வயது 10; 5ம் வகுப்பு படிக்கிறான். சொந்தத்திலும், நட்பிலும் எதிரிகள், துரோகிகள் அதிகமாக உள்ளனர்.மகன் நடவடிக்கைகள் எல்லாம் எங்களுக்கு எதிராக இருக்கின்றன. யாருடன் பேசாமல் தவிர்க்கிறோமோ, அவர்களுடன் நட்பு பாராட்டுகிறான். பரம எதிரி வீட்டிலும் விருந்து சாப்பிட்டு வருவான். வெளியே அழைத்து செல்லும் போது, பிடித்தவர், பிடிக்காதவர் என, யாரை கண்டாலும், 'ஹாய்... ஹலோ...' என கூவுவான். 'தாய் பகை, குட்டி உறவா...' என கேட்டால், அமுக்குணியாக சிரிப்பான். திட்டியும், அடித்தும் கூட திருந்த மறுக்கிறான். என்ன செய்யலாம். நல்ல தீர்வு சொல்லுங்கள். அன்புள்ள அம்மா...எதிரிகளாலும், துரோகிகளாலும் பண நஷ்டம் அடைந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்; அவதுாறுகளால் இழிவு படுத்தப்பட்டிருக்கலாம்; குணக்கொலை செய்யப்பட்டிருக்கலாம்; துாக்கம் இல்லாத பல இரவுகளை கழித்திருப்பீர் என்பது உங்கள் கடித வரிகள் காட்டுகின்றன. இந்த நேரடி பாதிப்பு, மகனுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.பத்து வயது சிறுவனிடம் கள்ளம் கபடமோ, சூதுவாதோ துளியும் இருக்காது. 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பர்; நிறைய குழந்தைகளுக்கு சொந்த வீட்டு பிரியாணி பிடிக்காது; அடுத்த வீட்டு பழைய கஞ்சியை அள்ளி அள்ளி குடிப்பர்.உங்களிடம் கடுகடுக்கும் எதிரிகளும், துரோகிகளும் மகனிடம் தேவதை முகம் காட்டுவர். ஒருவேளை அவர்கள் மனந்திருந்தி மகன் மூலம் சமாதான கொடி காட்டுகின்றனரோ என்னவோ... அல்லது உள்ளொன்றும், புறமொன்றும் வைத்து, மகனுடன் உறவாடி கெடுக்க துணிகின்றனரோ என்னவோ... எதிரிகளிடமும், துரோகிகளிடமும் சென்று பேசினால், அவர்கள் தரப்பு நியாயத்தை கூறுவர். எனவே, பகைவர் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும்.நீங்கள் செய்ய வேண்டியது-...கோபத்தையும், சுயபச்சாதாபத்தையும் விட்டு, நடுநிலையாக யோசிக்கவும். எதிரியாய் கருதும் நபர் பக்கம் நியாயம் இருந்து, அவர் மெய்யாலுமே, உங்கள் மகனிடம் அன்பு பாராட்டுகிறார் என்றால், வேதனை கொள்ள வேண்டாம்.மகன், அவர் வீட்டில் சாப்பிடுவதை கண்டும் காணாமல் விட்டு விடவும். அவர் புன்முறுவல் பூத்தால், பதிலுக்கு புன்முறுவல் செய்யவும். எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று குறைவதாக நிம்மதியடையவும்.துரோகியாய் பாவிப்பவர், மகனிடம் உள்நோக்கத்தோடு நட்பு பாராட்டுவதாக நினைத்தால், அந்த தொடர்பை கத்திரித்து விடவும். மகன் எவற்றை விரும்பி சாப்பிடுவானோ, அவற்றை ருசியாக சமைத்துக் கொடுக்கவும். மகனிடம் மனம் விட்டு, 'எனக்கு பிடிக்காதவர்களுடன் பேசுகிறாய் என நான் கோபப்படவில்லை. பிடிக்காதவர் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொல்லும் காலம் இது. அவர்களிடம் முகத்தை முறித்துக் கொள்ளாதே. புன்முறுவலுடன் போ, வா... ஆனால், அவர்கள் வீட்டில் சாப்பிடாதே... 'அந்நியர் எது கொடுத்தாலும், செம்மறி ஆடாய் இருந்து, எல்லாவற்றையும் மேய்ந்து விடாதே. ஆடாதொடை இலையை விட்டுப் போ; 'அன்பே சிவம்' என்ற உயரிய கொள்கை உள்ள மகனை பெற்றதற்கு பெருமைப்படுகிறேன்...' -என பேசி, உச்சி முகரவும்.குறிப்பாக, சொந்தங்களை பகைத்து கொள்ள வேண்டாம். பகைமையை அடுத்த தலைமுறைக்கு கடத்தவும் வேண்டாம். விழுந்து விழுந்து பழகவும் வேண்டாம்; எட்டி உதைக்கவும் வேண்டாம். மகனை திட்டி கொடுமைப்படுத்தாமல், தோழமையுடன் பழகவும். விரும்புவதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல நாசுக்காக சொல்லவும்.சண்டைக்கோழியாக இருந்து, எதிரி, துரோகிகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டாம். - அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !