உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (151)

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...நான், 17 வயது மாணவி; பிளஸ் 2 படிக்கிறேன்; என் பெற்றோர் வேலைக்கு செல்கின்றனர். எனக்கு, 10 வயதில் தம்பி இருக்கிறான்; விஞ்ஞான புதினங்கள் படிப்பதிலும், அறிவியல் படங்கள் பார்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.வெளி கிரகங்களில், எங்காவது நம்மைப் போல, மனிதர்கள் வாழ்கின்றனரா... பறக்கும் தட்டுகளில், அவர்கள் பூமிக்கு வருகின்றனரா... இவற்றை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.உங்கள் கருத்துகளை கூறுங்கள் ஆன்டி...- இப்படிக்கு, சி.ஜெனி.அன்பு மகளே...நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம், பல கோடி ஆண்டுகள் பழமையானது. இதில், 4.6 சதவீதம் அணுக்களும், 24 சதவீதம் குளிர், இருள் பொருட்களும், 71.4 சதவீதம் இருள் சக்தியும் நிறைந்துள்ளன.இந்த பிரபஞ்சத்தில், எண்ணிக்கையில் அடங்காத விண்மீன் மண்டலங்கள் உள்ளன. அவற்றில் மிகப்பெரியது, ஐ.சி., 1101 என்பதாகும்; இது, நாமிருக்கும் பால்வழி விண்மீன் மண்டலத்தை விட, 50 மடங்கு பெரியது.தன்னை தானே சுற்றி, சூரியனையும் சுற்றும் கோள்களில் பூமியும் ஒன்று. மற்ற கோள்கள், மெர்க்குரி, வீனஸ், மார்ஸ், ஜுபிடர், சனி, யுரெனஸ், நெப்டியூன் மற்றும் குட்டி கிரகம் புளூட்டோ. பிரபஞ்ச அளவுடன் ஒப்பிட்டால், நாம் மைக்ரோ புள்ளி அளவில் தான் இருப்போம். ஆனால், ஜாதி, மதம், கறுப்பு, சிவப்பு, பணக்காரன், ஏழை என ஓயாமல் சண்டையிட்டு ரத்தம் சிந்தி வருகிறோம்.சூரியன் சற்றே நம்மை நெருங்கி இருந்தால், வெப்பத்தை தாங்க முடியாமல் கருகி போயிருப்போம்; சற்றே விலகி இருந்தால், குளிர் தாங்காது உறைந்து போயிருப்போம். 'கோல்டிலாக்ஸ்' விதிகள் தான், நம்மை வாழ வைக்கிறது.பிற கிரகங்களில் உயிரினம் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றன பல நிறுவனங்கள். பிற கிரகத்தினர் வருவதாக கூறப்படும் பறக்கும் தட்டுகளை, பலர் பார்த்திருப்பதாக கூறினாலும், அது உண்மை என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.கிடைக்காததற்கு காரணம்... * பிற கிரகத்தினரின் செய்திகளை கண்டு கொள்ள முடியாத, தொழில் நுட்ப உலகத்தில் வாழ்கிறோம்* பிற கிரகத்தினர் ஏற்கனவே வந்து, சென்று விட்டனர்* பிற கிரகத்தினர் தொடர்பு கொண்டதை அரசுகள் மறைக்கின்றன* வெவ்வேறு கிரகத்தினர் தொடர்பு கொள்ள முடியாத அளவு துாரம் தடுக்கிறது* பிற கிரகத்தினர் நம்மை சந்திக்க விரும்பவில்லை* ஒருவரின் மொழியும், எழுத்தும் இன்னொருவருக்கு புரியவில்லை* வேறெந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை.இவ்வாறாக எடுத்துக் கொள்ளலாம்.மொத்தத்தில், இது போன்ற ஆராய்ச்சியை விட்டு, பசி, பட்டினி, வறுமை, ஜாதி, மொழி, இன, சண்டை இல்லாத தன்னிறைவு பெற்ற ஆரோக்கியமான, கல்வியில் உயர்ந்த சமுதாயமாக, உலக மக்கள் யாவரும் வாழ முயற்சிப்போம்! - அன்புடன், பிளாரன்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !