உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (206)

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 18; மனோதத்துவ இயலில் இளங்கலை முதலாண்டு படிக்கும் மாணவன். தமிழகத்தில் நிலவும் பழக்கவழக்கங்களில் ஒன்று என்னை மிகவும் நெருடுகிறது. தமிழகத்தில் நடிகர்களையும், அரசியல்வாதிகளையும், உறவினர்களையும், நண்பர்களையும் பட்டப்பெயர் சூட்டி அழைக்கின்றனர். இப்பழக்கம், இங்கு மட்டும் தான் உள்ளதா... உலகம் பூராவும் இருக்கிறதா... இப்பழக்கம் நல்லதா, கெட்டதா... என்னை தெளிவுபடுத்திக் கொள்ள விரிவாக கருத்துகளை சொல்லுங்க ஆன்டி!இப்படிக்கு,மாயா சந்துரு.அன்பு மகனுக்கு...நடிகர் திலகம், மக்கள் திலகம், லட்சிய நடிகர், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம், மக்கள் செல்வன் என்ற பட்ட பெயர்கள், தமிழ் சினிமாவில் நடிப்போருக்கு சூட்டப்பட்டுள்ளன.கலைஞர், நாவலர், பேராசிரியர், இனப்போராளி, தளபதி, அறிஞர், தென்னகத்து சாக்ரட்டீஸ், மருத்துவர் அய்யா, தானைத்தலைவன், சங்கத்தமிழன் தேசத்தந்தை, எல்லைக்காந்தி போன்ற பட்டப்பெயர்கள் அரசியல்வாதிகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.பட்டப்பெயர்கள் மனதிற்கு மிக நெருக்கமானவர்களுக்கு சூட்டப்படுகிறது. அல்லது அதிகம் வெறுக்க கூடிய நபர்களை விவரிக்க பயன்படுகிறது. ஒருவரின் செயல்களை பதிவு செய்ய, சுட்டிக்காட்ட, கேலி செய்ய பயன்படுகிறது.பட்டப்பெயர்களின் மூலநோக்கத்தை மொழியியல் அறிஞர்கள், சமூகவியல் நிபுணர்கள், மானுடவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் பகுத்தாய்ந்து காட்சிபடுத்த முடியும். பட்டப்பெயர்களை சூட்டுவதற்கு முக்கியமான காரணங்கள் உண்டு. அவை...* தனிநபர் வழிபாடு: நடிப்பு, விளையாட்டு, அரசியல், தொழில், நுண்கலைகள் சார்ந்த ஆளுமைகளை கடவுளாக, சூப்பர் ஹீரோக்களாக, தேவதைகளாக துதி பாடுவது. இப்படி துதிபாடுவோர் குறைந்த அறிவுள்ளவர்களாகவும், பலவீனர்களாயும், தாழ்வுமனப்பான்மை உள்ளவர்களாயும் இருப்பர்* மிகை உணர்ச்சி: வீட்டருகே உயிர் சேதம் இல்லாமல் நடந்த விபத்தை, 35 பேர் இறந்ததாக மிகைப்படுத்தி கூறுதல். இந்த மிகை உணர்வு சினிமாவிலும், இலக்கியத்திலும் இனிக்கும். நிஜ வாழ்வில் எட்டிக்காயாய் கசக்கும்* குழு மனப்பான்மை: ஒரு நடிகருக்கு, 20 பேர் சேர்ந்து ரசிகர் மன்றம் அமைத்தல், நடிகர்களுக்கு, 'கட் அவுட்' வைத்து பாலாபிஷேகம் செய்தல், கும்பலுடன் சேர்ந்து கூத்தடிக்கும் மனோபாவம் இன்று இளைஞர்களிடம் இருக்கிறது.பட்டப்பெயர் என்பது நாட்டுப்புற பாடல் போல... யாருக்கும் பட்டப்பெயர் வைக்காதே. யாரும் உனக்கும் பட்டப்பெயர் சூட்ட அனுமதிக்காதே. நீ சார்ந்துள்ள துறையில் உழைத்து முன்னேறி உச்சம் தொடு!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !