உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (72)

அன்பு பிளாரன்ஸ்...என் வயது, 30; சென்னை புறநகர் பகுதியில், கணவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். ஐந்து வயது மகன், சரியான அறுந்த வால். ஊரடங்கு நேரத்திலும் வாண்டுகளோடு விளையாடுவான். சென்ற வாரம் படிக்கட்டிலிருந்து விழுந்து விட்டான்; வாயில் பலத்த அடி; முன் வரிசையில் இரண்டு பற்கள் உடைந்து, வாயிலேயே தங்கி விட்டன. கீழ் உதடு கிழிந்து விட்டது. ஏராளமான ரத்தம் வெளியேறியது. முதலுதவி செய்தோம். எங்கள் பகுதியில் பல் மருத்துவமனைகள் மூடியுள்ளன. என்ன செய்யலாம்... நல்ல ஆலோசனை சொல்ல வேண்டுகிறேன்.அன்புமிக்க அம்மா... சேட்டை செய்யாதவர்கள், குழந்தைகளே இல்லை. உங்களுக்கு பதில் சொல்வதற்காக, ஒரு குழந்தைகள் நல, பல் மருத்துவரை அணுகினேன்.அவர் கூறிய அறிவுரைகள் இங்கு தருகிறேன்...* உதட்டு காயத்துக்கு, 'டென்டோ ஜெல்' தடவலாம்* அமாக்சிலின் ஆன்டிபயாடிக், 250 மி.கி., காலையில் ஒன்று; இரவில் ஒன்று உணவுக்குப் பின் விழுங்கலாம்* வலி நிவாரணியாக, டோலோ 250 பாரசிட்டமால் சிரப் புகட்டலாம்.முதலில், குழந்தையின் வாயை முழுமையாக பரிசோதிப்பர் மருத்துவர். 'எக்ஸ்ரே' எடுத்து, மீண்டும் பற்கள் சரியான விதத்தில் முளைக்குமா... என சோதிப்பார்.முழுவதும் விழாமல் வாயில் தொங்கிக் கொண்டிருக்கும், இரண்டு பற்களுக்கும் வேர் சிகிச்சை செய்து சரி செய்யலாம்.வாய் காயம் ஆறும் வரை, திரவ உணவு அல்லது மெல்லுவதற்கு எளிதான இட்லி போன்ற உணவு வகைகளை கொடுக்கலாம். மகனுக்கு பல் பராமரிப்பு பற்றியும், பாதுகாப்பாய் விளையாடுவது பற்றியும் கற்றுக் கொடுக்கவும். செஸ், கேரம் போர்டு போன்ற உள் அரங்க விளையாட்டுகளை பயிற்சி செய்வது பற்றி ஆலோசனை வழங்கவும்.மகன் எதிர்காலத்தில், பாதுகாப்பாய் விளையாட, தர்மோ பிளாஸ்டிக்காலான, மவுத் கார்டை சிபாரி செய்வார் டாக்டர். விளையாடும் போது, அதை மாட்டிக் கொள்ளலாம்; வீட்டுக்கு வந்ததும் கழற்றி விடலாம். பல் செட்டை சுத்தம் செய்வது போல, 'மவுத் கார்டை'யும் சுத்தம் செய்ய வேண்டும். மகனுக்கு பால் பற்கள் தான் விழுந்திருக்கின்றன; அவை மீண்டும் முழுவதும் முளைத்து விடும். ஆனால், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காட்டி சரியாக முளைக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.மவுத் கார்டில் இரண்டு வகை உள்ளன.ஒன்று, கஸ்டம் மேட் மவுத் கார்டு; இரண்டு, ப்ரி பேப்ரி கேட்டட் மவுத் கார்டு. ஒரு மவுத் கார்டை ஒரு ஆண்டு வரை உபயோகிக்கலாம்; பின், புதிய மவுத் கார்டுக்கு மாற வேண்டும். மகனுக்கு தினமும் இரவில் ஒரு டம்ளர் பசும் பால் கொடுக்கவும்; ஆரஞ்சு பழச் சாறும் தரலாம். மதிய சாப்பாட்டில், தயிர் சேர்க்கலாம். சோயா பீன்ஸ் சமைத்துக் கொடுக்கலாம்.மீன் எண்ணெய் மாத்திரையை, தினமும் காலை ஒன்று; இரவில் ஒன்று உட்கொள்ளலாம்; உணவில் தினமும் கீரை சமைத்து சாப்பிட கொடுக்கவும்.பால்பற்கள் ஒரு முறை விழுந்து முளைத்து விட்டால், ஆயுளுக்கும் அதே பற்களுடன் தான் வாழ்ந்தாக வேண்டும்; அதனால், எதிர்காலத்தில், கவனமாக விளையாட அறிவுரை கூறவும்!சேட்டைக்கார மகனுக்கு, ஆன்ட்டியின் அன்பு முத்தங்கள்.- அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !