இளஸ் மனஸ்! (83)
அன்பு கனிந்த பிளாரன்ஸ்... என் வயது ௨௮; இல்லத்தரசியாக இருக்கிறேன். பன்னாட்டு நிறுவனத்தில், அதிகாரியாக பணியாற்றுகிறார் கணவர்; ஒரே மகனுக்கு வயது, 3; எதை கேட்டாலும், நான் சொன்னதையே, திருப்பி சொல்கிறான்.ஆர்வத்துடன், 'மம்மு சாப்பிடுறியா...' என கேட்டால், 'மம்மு சாப்திரியா...' என பதில் கூறுகிறான். நேற்று பார்த்த சினிமா வசனத்தின் ஒரு வரியை இன்று கூறுகிறான். தலையில் அடிப்பட்டிருக்குமோ... மனநிலை பாதிக்கப்பட்டிருக்குமோ என பயப்படுகிறேன். நான், 100 கேள்விகள் கேட்டால், அந்தக் கேள்விகளையே பதிலாக தருகிறான். என்ன செய்யலாம் சகோதரி... அன்புமிக்க அம்மா...மனிதனை, 'சமூகபிராணி' என்றே அழைக்கிறது சமூகவியல். குழந்தைகள், நடத்தையை, பேச்சை, உணவு விருப்பத்தை பெற்றோரை பார்த்து தான் வடிவமைத்துக் கொள்கின்றன. மூத்தோரின் நடவடிக்கைகளை, குழந்தைகள் அப்படியே நகல் எடுக்கின்றனர். குழந்தை, சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. மொழி அறிவு போதுமான அளவுக்கு வளரவில்லை என ஆறுதல் கொள்ளலாம். மூன்று வயது குழந்தைக்கு, அதன் தாய் மொழியில், 200க்கும் மேற்பட்ட வார்த்தைகள் தெரிந்திருக்கும்; அவற்றிற்கு, மூன்று அல்லது நான்கு சொற்களை கோர்த்து வாக்கியமாக்க தெரியும். ஆனால், உங்கள் குழந்தைக்கு அந்த திறமை இல்லை; குழந்தைக்கு, 'எக்கோலாலியா' என்ற குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது.ஆட்டிசம், டியூரெட் சின்ட்ரோம் அல்லது டிமென்ஷியா இருந்தாலும், குழந்தைகள் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக இருப்பர்.நான்கு வகையாக எக்கோலாலியா உள்ளன.* உடனடி எக்கோலாலியா: வார்த்தைக்கு வார்த்தை உடனடியாக திருப்பி கூறுதல்* தாமதமான எக்கோலாலியா: சில மணி நேரத்துக்கு முன் கூறிய வார்த்தையை திருப்பி கூறுதல்* தீவிரம் தணிந்த எக்கோலாலியா, சூழல்சார் எக்கோலாலியா என்பவையும் உள்ளன.குழந்தையின் குறைபாட்டை நீக்க, முதலில் நீங்களே பேச்சு பயிற்சியாளராக மாற வேண்டும். தினமும், 100 புதிய தமிழ் வார்த்தைகளையாவது அறிமுகப்படுத்த வேண்டும். மகனுக்கு எளிதில் புரியும் சிறுவர் கதை ஒன்றை வாசித்துக் காட்டவும். ஒரு பேச்சு பயிற்சியாளரை அமர்த்தி, தினமும் ஒரு மணிநேரம் பேச்சு பயிற்சி கொடுக்கவும். ஒரு கேள்வி கேட்டால், அதற்கு சரியான பதிலை, சரியான தருணத்தில் பதிலளிக்க பழக்கவும்.மிருகங்கள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்களின் படங்களுடன் கூடிய பெயர்களை கொண்ட சுவரொட்டிகளை அவன் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் ஒட்டவும். விதவிதமான கேள்விகளை கேட்டு, மகனிடமிருந்து பதிலை பெறவும்.'சாக்லெட் வேண்டுமா...' என கேட்டு உற்சாகப்படுத்தவும்.திணறினால், பதிலை சப்தமில்லாமல் வாயசைத்துக் காட்டவும்; வாயசைப்பை புரிந்து பதிலை கூறி விடுவான்.வீடு முழுக்க பொம்மைகளை நிறைத்து, அவற்றுக்கு பெயர் சூட்டி, திரும்ப கூறக் கேட்கவும். பேச்சு பயிற்சி வீடியோக்களை மகன் முன் ஓட விடவும். கேள்விகளுக்கு சரியான பதில் கூறிவிட்டால், பாராட்டி முத்தம் கொடுக்கவும். அவனை விட, மூத்த குழந்தைகளுடன் பழக விடவும். தொடர்ந்து ஓர் ஆண்டு, முழு மூச்சாய் முயன்றால், மகன் சிறப்பாக பேச ஆரம்பித்து விடுவான்; கவலையை விடவும்.- அன்புடன், பிளாரன்ஸ்.