உள்ளூர் செய்திகள்

நான் கறுப்பில்ல... ஆனா பளப்பளா...

நீரில் மூழ்கி மீன்களைப் பிடிப்பதில் சிறப்பாகச் செயல்படும் பறவை கார்மோரண்ட். உலகின் பல பாகங்களிலும் இப்பறவை காணப்படுகிறது. இப்பறவை களில் சில குடும்பங்கள் எப்போதும் கடல் அருகிலேயே வாழ்கின்றன. மற்றவை நதிகள், ஏரிகள், சதுப்பு நிலங்களின் அருகே வசிக்கின்றன.இப்பறவைகளின் எல்லா இனத்திற்குமே உடலின் மேல்பகுதி இறகுகள் கறுப்பாக இருக்கும். ஆனால், இது கறுப்பல்ல. தூரத்திலிருந்து காணக் கறுப்பாக இருந்தாலும், இதன் இறகுகளின் நிறம் கரும்பச்சை அல்லது கருநீலம். உலோகப் பளபளப்புடன் கூடியவை. நீர்நிலையை அடுத்துள்ள பாறைகளில் அமர்ந்தபடி, இறக்கைகளை வெயிலில் காய வைத்துக் கொண்டிருக்கும். நீரில் மீன் வரவைக் கண்டதும், 'டைவ்' அடித்துப் பாயும். அலகில் பிடித்த மீனுடன் குழந்தைகளுக்குத் தர கூட்டை நோக்கிச் சிறகடித்துப் பறக்கும். கார்மோரண்ட் பறவையை, பாட்டில் போன்ற அதன் உடல் அமைப்பிலிருந்து எளிதாக இனங்கண்டு கொள்ளலாம். இதற்கு நீண்ட மெலிதான கழுத்து உண்டு. பறக்கும் போது தன் கழுத்தை முழுமையாக முன்னால் நீட்டிக் கொண்டு பறக்கும். மற்ற கடல் பறவைகளைப் போலல்லாமல் இது, சுள்ளிகளையும், கடல் பாசிகளையும் கொண்டு கூடு அமைக்கிறது. தன் குஞ்சுகளுக்கு அளிக்கும் உணவை இவை விழுங்கி, சேமித்துக் கொண்டு, பிறகு கக்கி வெளியே கொண்டு வந்து குஞ்சுகளுக்குத் தருகிறது. முழு மீனையும் விழுங்கும் ஆற்றல் பெற்றவை இப்பறவைகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !