உள்ளூர் செய்திகள்

சித்திரை வருடப்பிறப்பு!

ஏப்ரல் 14ம் தேதி, புதன்கிழமை, சித்திரை 1ம் தேதி, சார்வரி ஆண்டு முடிந்து, மங்களகரமான, பிலவ வருடம் பிறக்கிறது. இந்தியா மற்றும் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள், சித்திரை மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.சித்திரை முதல் நாளை வரவேற்போர், அதற்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜையறையில் தட்டில் பழம், காய்கறி, நகை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, அதிகாலை, அதில் கண் விழிப்பர். எப்போதும், கனியின் சுவை போன்று, இனிய வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வழிபடும் பழக்கம் உள்ளது.அன்று, பல வகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் போன்றவற்றில் செய்யப்படும் மருந்து நீரில் நீராட வேண்டும். பின், இறைவனை வணங்க வேண்டும். தான தர்மங்களை செய்வது வாழ்வாங்கு வாழ செய்யும். பொங்கல் வைத்து, சூரியனை வழிபாடு செய்யலாம். புத்தாண்டு தினத்தில், புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வழிபடுவர்.கேரளாவில், சித்திரை வருடப்பிறப்பு, 'சித்திரை விஷு' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.'விஷு' என்றால், இரவும், பகலும் சமமானது என்று பொருள்.மனம் கனிந்து, இறைவனை வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் துன்பம் விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. வரும் ஆண்டு முன்னெடுக்கும் எந்த நற்செயல்களும், தங்கு தடையின்றி நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !