உள்ளூர் செய்திகள்

கோவிச்சுட்டு வந்துடுச்சு...

மதுரை, நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அன்று அம்மாவுடன் சண்டை போட்டு, சாப்பிடாமல் பள்ளி சென்று விட்டேன்; வகுப்பில், 'ரேங்க்' அடிப்படையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். தமிழாசிரியை பழனியம்மாள், பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீர் என, வகுப்பு வாசலில், உணவு பாத்திரத்துடன் நின்ற என் பாட்டியை கண்டு துாக்கி வாரி போட்டது. ஆசிரியை, 'வாங்கம்மா... என்ன வேணும்...' என்று அன்புடன் விசாரித்தார். 'பேத்தி கோவிச்சுட்டு சாப்பிடாம வந்துடுச்சு... அதான், சாப்பாடு எடுத்து ஓடியாந்தேன்...' என்றார். என்னை அழைத்து, 'நல்லா படிச்சா மட்டும் போதாது. கோபத்தை குறைக்க வேண்டும்; சிரிச்ச முகமா டிபனை வாங்கு... பாட்டியோட அருமை பிற்காலத்தில் தான் தெரியும்...' என்று அறிவுரைத்தார். முயன்று கோபத்தை குறைத்தேன். படிப்பில் கவனம் செலுத்தி மதுரை, இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லுாரியில், தமிழ்ப்பேராசிரியையாக பணிபுரிகிறேன். இப்போது, என் வயது, 45; அந்த ஆசிரியையை மனதில் கொண்டு, மாணவியர் முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.- பா.பனிமலர், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !