மரத்தின் உயிர்!
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2017ல் பயிற்சி ஆசிரியராக இருந்தேன். எனக்கு வழிகாட்டிய ஆசிரியர் ரவியுடன், அன்று காலை, 10ம் வகுப்பு பாடவேளை முடித்து வந்துகொண்டிருந்தேன். பள்ளி வளாக மரத்தில் சாய்ந்திருந்த ஒரு மாணவன், சிறு கிளையை உடைத்து, இலைகளை கிள்ளி எறிந்து கொண்டிருந்தான்.இதைக் கண்ட ஆசிரியர், 'எதற்காக அந்த கிளையை உடைத்தாய்...' என்று கேட்டார். பதில் சொல்ல திணறியவன் காதைப் பிடித்து திருகினார். துடிதுடித்தபடி, 'சார்... வலிக்குது...' என்று கத்தினான். தொடர்ந்து, 'மரத்திற்கும் வாய் இருந்திருந்தால், உன்னைப் போல் தான் வலியால் துடித்து அழுதிருக்கும்... 'வலிக்குது... கிள்ளாதே...' என்று கத்தியிருக்கும்; தாவரத்திற்கும் உயிர் உண்டு; இனிமேல் இப்படி செய்யாதே...' என்றார். இப்படி ஓர் அறிவுரை புகட்டியது கண்டு வியந்தேன்.என் வயது, 28; அவர் பாணியிலே மாணவர்களை திருத்த முயன்று வருகிறேன். - க.மணிகண்டன், கள்ளக்குறிச்சி.தொடர்புக்கு: 90950 92642