உள்ளூர் செய்திகள்

அன்பும் நன்றியும்!

மதுரை மாவட்டம், வத்தலக்குண்டு, மகாலட்சுமி மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.ஆங்கிலம், அறிவியல் பாடங்களை புதிதாக பொறுப்பேற்றிருந்த ஆசிரியை பிரமிளா நடத்தினார். எப்போதும் புன்சிரிப்புடன் காணப்படுவார். பேச்சில் நகைச்சுவை பூக்கும்; கண்டிப்பதிலும் கனிவை கடைபிடித்தார். உடை விஷயத்தில் மிக நேர்த்தியாக இருப்பார்; காட்டன் புடவையை கஞ்சி போட்டு, 'அயர்ன்' செய்து, மொட மொடப்பாக அணிந்திருப்பார். தோற்றத்தில் மட்டுமல்ல, பாடம் எடுப்பதிலும், ஒரு மிடுக்கு இருக்கும். கம்பீரமாக காட்சி தருவார். எல்லா மாணவியருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ஆங்கில பாடம் எடுக்கும் போது, புதிய வார்த்தைகளை பென்சிலால் அடிக்கோடிட்டு தமிழில் அர்த்தம் கண்டுபிடித்து வர சொல்வார். மறு நாள் வகுப்பில் அந்த சொல்லுக்கான தமிழ் பொருளைக் கேட்பார்; தெரிந்தவர் எழுந்து சொல்லலாம். அந்த கல்வி ஆண்டில் அநேகமாக, நான் தான் அதிகம் பொருள் சொல்லியிருப்பேன். கைதட்டி பாராட்டுவார்; பெருமையாக இருக்கும்; ஆங்கில பாட தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அவரே காரணம். அறிவியல் பாடத்தையும் விரும்பும் வகையில் நடத்தினார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், அறிவியலில், 97 மதிப்பெண்கள் பெற்றேன்.தற்போது என் வயது, 59; பள்ளிப் பருவ பசுமையான நாட்களை மறக்க முடியவில்லை; சிறுவர்மலர் மூலம் அந்த ஆசிரியைக்கு, வணக்கத்தையும், அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.- சரோஜா ஸ்ரீதர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !