மாய மோதிரம் (8) - இருகூர் இளவரசன்
இதுவரை: ஸ்கூலுக்குச் சென்ற மாணவர்களை சிங் தன் ஜீப்பில் ஏற்றி வந்து ஒரு இருட்டறையில் அடைத்தான். இனி-அது ஒரு இருட்டான அறை, ஜன்னலிருந்து கொஞ்சமாய் வெளிச்சம் தெரிந்தது. முகுந்தனும் அவனுடன் வந்திருந்த மணிகண்டன், கணேசன் மூவரும் மயக்கம் தெளிந்து கண் விழித்தனர்.தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பது தெரியாமல் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்தனர்.''முகுந்தா... நாம எங்க இருக்கறோம்?'' எனக் கேட்டான் மணிகண்டன்.''எனக்கும் தெரியல...'' என்றான் முகுந்தன்.''நம்மை பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடறேன்னு சொல்லிட்டு அந்த ஆளு இந்த ரூமுல கொண்டுவந்து விட்டிருக்கான்...'' கணேசன் தன் நிலையை உணர்ந்து சொன்னான்.''அந்த சிங் ரொம்ப நல்லவர்னு நெனைச்சேன். அவர் குடியிருக்கற காம்பவுண்டுலதான் என் அப்பா வாட்ச்மேனா வேலை செய்யறார். அதனால்தான் அவர் பேச்சை நம்பி அந்த ஜீப்ல ஏறினேன். இப்ப என்ன செய்யறது?'' எனப் புரியாமல் புலம்பினான் முகுந்தன்.''ஒழுங்கா வாத்தியார் குடுத்த, 'ஹோம் ஒர்க்கை' செய்துட்டுப் போயிருந்தா பள்ளிக்கூடம் போயிருக்கலாம்,'' மணிகண்டன் பயந்து அழ ஆரம்பித்தான். மணிகண்டன் அழ ஆரம்பித்ததும், கணேசனும் அழ ஆரம்பித்தான்.''டேய் ... எதுக்காக அழறீங்க? மாட்டினது மாட்டினோம், எப்படித் தப்பிக்கறதுன்னு யோசிப் போம்,'' என, தைரியம் சொன்னான் முகுந்தன்.முகுந்தன் சொன்ன தைரியத்தில் இருவருக்கும் நம்பிக்கை எழவில்லை. சட்டெனக் கதவு திறந்தது. மூவரின் முகத்திலும் அப்படி ஒரு வெளிச்சம். கதவைத் திறந்ததும் வயதான பாட்டி உள்ளே வந்தாள். வெள்ளை முடித் தலையுடன், கறுப்பு புடவை அணிந்திருந்தாள். சுருங்கிப் போன பெரிய விழிகள் பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.''யார் நீங்க? ஏன் அழறீங்க?'' ஒன்றும் தெரியாதது போல் கேட்டாள்.''பாட்டி... என் பேர் முகுந்தன், இவங்க ரெண்டு பேரும் என் ஸ்கூல் பிரண்ட்ஸ். எனக்குத் தெரிஞ்ச சிங் ஒருத்தர் எங்களைப் பள்ளிக்கூடத்துல, 'ட்ராப்' பண்றதா சொல்லி இங்க கொண்டு வந்து விட்டுட்டார்,'' என்றான் முகுந்தன்.''அப்படியா... இதுக்கா அழறீங்க?''''பாட்டி... பயமாக இருக்குது பாட்டி!'' என்று மணிகண்டன் சொன்னான்.''ஏன் பயப்படறீங்க? யாராவது உங்களைத் திட்டினாங்களா? அடிச்சாங்களா?''ஆறுதலாய் பேசினாள் பாட்டி.''யாரும் திட்டலை!'' என்றான் முகுந்தன்.''பின்ன ஏன் பயப்படறீங்க? என் கூட வாங்க... முதல்ல உங்களுக்கு சாப்பாடு குடுக்கறேன்!'' என்றாள்.''சாப்பாடு வேண்டாம்! நாங்க வீட்டுக்கு போகணும், எங்களை எங்கப்பா, அம்மா தேடு வாங்க,'' அழுதான் கணேசன்.''இதப்பாருங்க, நான் சொல்றபடி நீங்க கேட்டா உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன். இல்லைன்னா... இந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கெடக்க வேண்டியதுதான் என்ன சொல்றீங்க?'' என்றாள் பாட்டி.''பாட்டி... எப்படியாவது எங்களை வீட்டுக்கு அனுப்பி வைச்சாப் போதும்... நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறோம்,''என்றான் முகுந்தன்.''பரவாயில்லையே! உங்க மூணு பேர்ல நீதான் புத்திசாலியா இருக்கே! என் கூட வாங்க, முதல்ல சாப்பாடு, அதுக்கப்புறம் நீங்க செய்ய வேண்டியதை நான் சொல்றேன்,''அந்த அறையை விட்டுப் பாட்டி மூவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.வெளியே நிறைய லாரிகள் நின்றிருந்தன. விண்ணை முட்டுமளவுக்கு காம்பவுண்டு சுவர் மிகவும் உயரமாக இருந்தது. கறுப்பு நிற பெரிய கேட். அங்கே தொப்பி அணிருந்த இரண்டு வாட்ச் மேன்கள் நின்றிருந்தனர். சற்று தூரத்தில் நீள நீளமாய் பெரிய பெரிய குடோன்கள் தெரிந்தன. ஏதோ மிஷின் ஓடுகிற சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பாட்டி மெதுவாக நடந்தபடி மூவரையும் அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு வந்தாள்.உணவு விடுதி போன்ற இடம் அது. பாட்டி அதனுள் நுழைந்து அங்கிருந்த பெண்ணிடம் காதில் ஏதோ சொன்னாள். அவள் முகுந்தனையும், மற்ற இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டு, உள்ளே போனாள்.''வாங்க குழந்தைகளா இப்படி உட்காருங்க,'' நீளமாய் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னாள்.மனதில் படபடப்புடன் மூவரும் உட்கார்ந்தனர்.மூன்று தட்டுகளில் சப்பாத்தி போன்ற ரொட்டித் துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டபடி அப்பெண் கொண்டு வந்து கொடுத்தாள்.''இதைச் சாப்பிடுங்க!'' என்றாள்.பார்க்கவே என்னவோ போலிருந்தது. அரிசிச் சோறும், தயிரும், பருப்புக்குழம்புமாய் காய்ந்து போனது போலக் காணப்பட்ட ரொட்டித் துண்டு களை பார்ப்பதற்கே அவர்களுக்கு பிடிக்கவில்லை.''பாட்டி... இதை நாங்க சாப்பிட மாட்டோம். எங்களுக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். எங்களை இங்கிருந்து அனுப்பி வையுங்க,'' என்றான் முகுந்தன்.''தம்பி... இது சாதாரண இடம் இல்லை. இந்த இடத்துல யாராலயும் சாதாரணமா வர முடியாது. அப்படி வந்துட்டா திரும்பிப் போக முடியாது. அதனால குடுக்கறதை சாப்பிட்டு, நான் சொல்றதைக் கேளுங்க,'' என்றாள் பாட்டி.''நீங்க சொல்றதை நாங்க கேக்க வேண்டிய அவசியம் இல்லை! இது எந்த இடம்?'' எனக் கேட்டான் முகுந்தன்.''இது ஒரு காட்டு பகுதியில இருக்கு. இந்தக் காட்டுப் பகுதியில் சிங்கம், புலி, கரடி, பாம்புகளும், ஆளைக் கொல்லும் மிருகங்களும் பாம்புகளும் இருக்குது. இந்த இடத்தை பற்றி உங்களுக்குப் சொன்னால் புரியாது. இது ஒரு மாவுத்தொழிற்சாலை. இங்குதான் மைதாமாவு தயாரிக்கப்படுகிறது. உங்களை மாதிரியான பிள்ளைகள் நிறையப் பேர் வேலை செய்யறாங்க! அவங்களைப் பார்த்தா உங்களுக்கும் இங்கேயே இருக்க மனசு வரும்,'' என்றாள் பாட்டி.''தேவையில்லை! நீங்க சொல்றபடிக் கேக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! இந்தக் கிழவிகிட்ட நமக்கென்னடா பேச்சு... வாங்கடா,'' என்று அங்கிருந்து மூவரும் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். ஓட்டமும் நடையுமாக அவர்கள் பார்த்த பெரிய <'கேட்' அருகே வந்தனர்.வாட்ச்மேன் கையில் ஒரு சவுக்கு இருந்தது.''எங்கடா போறீங்க?'' வாட்ச்மேன் கேட்டான்.''கதவைத் திறந்துவிடுங்க, நாங்க வெளியே போகணும்,'' என்றான் முகுந்தன்.கையிலிருந்த சவுக்கால் ஓங்கி ஒரு அடி விட்டான் வாட்ச்மேன்.முகுந்தனின் முதுகில் அந்த அடி பலமாய் விழுந்தது.''அம்மா!'' என்று அலறியடித்துக் கீழே விழுந்தான்.அடுத்த அடி மணிகண்டன் முதுகில் விழுந்தது.''அம்மா!'' என்று சுருண்டு விழுந்தான்.மறுபடியும் சவுக்கை ஓங்க-''அடிக்காதீங்க... அடிக்காதீங்க, வலி தாங்க முடியலை,'' என்று மூவரும் கும்பிட்டபடி நின்றனர்.''இனிமே வெளியே போகணும்னு கேட்பீங்களா?'' என்றார் வாட்ச்மேன்.என்னபதில் சொல்வது என்று தெரியமால் விழித்தனர்.''சொல்லுங்கடா!'' என்று சவுக்கை ஓங்க-''எங்களை ஏன் போக்ககூடாதுன்னு சொல்றீங்க? நீங்க யாரு? எதுக்காக எங்களை அடிக்க சொல்றீங்க?'' என்று கேள்விகள் கேட்டான் முகுந்தன்.''இந்தக் காம்பவுண்டுக்குள் வந்தால் அதுக்கப்புறம் யாரும் வெளியே போக முடியாது. மீறிப் போக நெனைச்சா, அடிச்சே கொன்னுடுவோம். உயிரோட போக விடமாட்டோம்... நீ கேட்ட கேள்விக் கெல்லாம்... அந்தப் பாட்டி பதில் சொல்லுவாங்க, அந்தப் பாட்டி சொல்றபடிக் கேட்டா, உங்களுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும். இல்லைன்னா பட்டினி போட்டே கொன்னுடுவாங்க போங்க,'' என்று கத்தினான் வாட்ச்மேன்.மணிகண்டனும், கணேசனும் முகுந்தனைப் பார்த்து அழுதனர்.''அந்த சிங் உனக்குத் தெரிஞ்சவர்னு சொன்னதால தானே அந்த ஜீப்ல ஏறினோம். உன்னால தான்டா எங்களுக்கு இந்தக் கஷ்டம்,'' என்றான் கணேசன்.''எனக்கு என்னடா தெரியும்! அந்த சிங் நல்லவர்னு நெனைச்சேன்,'' என்றான் முகுந்தன்.''எனக்கு ரொம்ப பயமா இருக்கு முகுந்தா... இங்க ஒரே மர்மமா இருக்குடா... ஆளுங்கெல்லாம் பாக் கவே பயமாக இருக்காங்க!'' அழுதான் கணேசன்.''கணேசா... என்னை நம்பித்தான் அந்த சிங்கோட ஜீப்ல ஏறினீங்க. கவலைப்படாதீங்கடா... என்னை நம்புங்க, என்னால உங்களைக் காப்பாத்தி வெளியே கொண்டு போக முடியும். ஆனா, அதுக்கும் முன்னால இங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம். இந்த நிமிஷத்துல இருந்து இவங்க என்ன சொன்னாலும் மறுத்துப் பேசாம கேட்க ஆரம்பிப்போம் புரியுதா?'' என்று இருவருக்கும் ஆறுதல் சொன்னான் முகுந்தன்.வேறுவழியில்லை, என்கிற காரணத்தால் இருவரும் சரி என்று ஒப்புக்கொண்டனர்.கிழவி அங்கு வந்து சேர்ந்தாள்.''கொழந்தைங்களா! நான் கொடுத்ததை சாப்பிடாமல் வெளியே தப்பிச்சுப் போகலாம்னு பார்த்தீங்க... இப்ப என்னாச்சு பார்த்தீங்களா? இனிமே என்ன செய்யறதா இருக்கீங்க?'' எனக் கேட்டாள்.''பாட்டி...இந்த ஆளு அடிக்கிறாரு பாட்டி... எங்களை அழைச்சிட்டு வந்த அந்த சிங் எங்க இருக்காரு பாட்டி, அவரை நாங்க பார்க்கணும்,'' என்றான் முகுந்தன்.''அவர்தான் எங்க எஜமான்... அவரை யாரும் அவ்வளவு சுலபமா பார்க்க முடியாது. அவர் எங்களைப் பொறுத்தவரையில், ஆண்டவன் மாதிரி. திடீர்னு வருவார், திடீர்னு போவார். அதனால, அவரை நீங்க பாக்கணும்ங்கற எண்ணத்தை விட்டிடுங்க! இப்ப உங்களுக்கு இது என்ன இடம்? இங்க என்ன நடக்குதுன்னு காட்டறேன். அதுக்கப்புறம் நான் சொல்றபடி நடந்துக்கிட்டா, உங்கள் உயிருக்கு நான் பாதுகாப்புக் கொடுக்கறேன் சரியா?'' பாட்டி சொன்னாள்.''சரி!'' என்றான் முகுந்தன்.வாங்க எனக்கூறி மூவரையும் அழைத்துக் கொண்டு நடந்தாள்.பெரிய பெரிய குடோன்கள் வரிசையாய் இருந்தன. அதிலுள்ள ஒரு குடோனின் 'கேட்' பக்கம் வந்து நின்றாள். தன் இடுப்பில் வைத்திருந்த மொபைல் போனை எடுத்து நம்பர்களை அழுத்தினாள். ஏதோ இந்தி பாஷையில் பேசினாள்.சற்று நேரத்தில் பச்சை நிற யூனிபார்ம் போட்ட ஒருவன் வந்து கதவைத் திறந்தான்.''இவங்க மூணுபேரும் புதுசா வந்தவங்க, இவங்களை உள்ளே அழைச்சிட்டுப் போ,'' என்றாள்.''வாங்க,'' என்றான் வந்தவன்.மூவரும் தயங்கித் தயங்கி அந்த கதவினுள் சென்றனர். அந்த குடோனுக்குள் நூற்றுக்கும் மேல் பத்து, பனிரெண்டு வயதுச் சிறுமிகள், சிறுவர்கள் இருந்தனர்.மாவு மூட்டைகளைத் தூக்கிக் கொண்டும், டின்களில் மிஷின்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த மாவுகளை நிரப்பித் தலையில் வைத்துக் கொண்டும், பிளாஸ்டிக் பைகளில் மாவுகளை நிறைத்துக் கொண்டுமாய் வேலைகள் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் முகத்திலும், உடல்களிலும் மாவுகள் படிந்து, அனைவரும் மாவு பூசிய முகத்துடன் காணப்பட்டதைக் கண்டு முகுந்தன், மணிகண்டன்,கணேசன் மூவரும் வியப்போடு நின்றனர். -8 தொடரும்