மாய விழிகள்! (20)
முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் கும்பல் பிடியிலிருந்த மாணவியரை மீட்க முயன்றபோது இருவரும் சிக்கி கொண்டனர். சமயோசிதமாக செயல்பட்டு உண்மையை அறிந்து, மீட்க முயன்றனர். இனி - அனுவும், தியாவும் இருந்த வேன் அருகே பக்கவாட்டில் ஒரு அசைவு தெரிந்தது. அந்த திசையில் திரும்பிய தியா, அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தாள்.''அனு...''''என்னக்கா...''''அங்கே பாரு...''அனுவும் அந்த திசையில் திரும்பினாள்.தோப்புக்கிணற்றில் கண்ட மூதாட்டி அங்கு நின்றிருந்தார். கையில் குச்சி வைத்திருந்தார். கூன்முதுகு காரணமாக, சற்று குனிந்த நிலையில் இருந்தார்.மூதாட்டி முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.இவர்கள் பார்த்து விட்டதை உணர்ந்து, சற்று பின்வாங்கி மரங்களுக்கு இடையே மறைந்தார்.''அக்கா... அந்த மூதாட்டி ஒளிஞ்சிக்கிட்டாங்க...''''ஆமா அனு... அவங்க செயலை பார்த்தால், இங்கே வந்திருப்பதை நமக்கு உணர்த்தி விட்டு மறைந்தது போல தெரிகிறது...''''எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது...''வேனுக்கு மறுபுறம் நின்றிருந்தவர்கள் பூஜை நடக்கும் இடத்திற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.''எவ்வளவு துாரம் காரில் போக முடியும்...''''காரில் செல்வது கொஞ்சம் சிரமம் சார்... ஜீப்பில் புலிக்குட்டைங்கிற இடம் வரை போகலாம். அதன்பின், சிறிது துாரம்தான். நடந்தே சென்று விடலாம்...''''எல்லாரும் போக ஜீப்பில் இடம் பத்தாதே...''''கார் போவதில் தான் சிரமம் சார். ஜீப் போகிற வழியில் வேன் வந்து விடும். நீங்கள் ஜீப்ல போங்க... நாங்க வேன்ல வந்து விடுகிறோம்...''''சரி...'' என்ற இலக்கியன், சாமியாரிடம், ''சாமிஜி... நீங்க என் கூட வந்துடுங்க...'' என்று ஜீப்பை நோக்கி நடந்தார்.நடக்கும்போதே மொபைலை எடுத்து, பூஜை நடக்கும் இடத்தில் இருந்தவர்களை அழைத்தார்.''அரவிந்தன், பூஜை ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கிறது. ஓ... சரி சரி நல்லது...'' முகத்தில் மலர்ச்சி காட்டிய அவர் பூசாரியிடம் திரும்பினார்.''பூசாரி... உங்களுக்கு வழி தெரியுமே... நீங்க வேன்ல ஏறி வழி காட்டிட்டு வாங்க. வார்டன், மாணவியர் அப்புறம் செல்வா, வீரா எல்லாரும் வேன்ல வந்துடுங்க...''கட்டளை இடுவது போல் சொல்லி, ஜீப்பில் ஏறினார் இலக்கியன். சபாரி அணிந்த, ஐந்து நபர்களில், இரண்டு பேர் ஜீப்பில் ஏறிக்கொள்ள, மூன்று பேர் வேனுக்கு வந்தனர்.காரை அங்கேயே விட்டு எல்லாரும் கிளம்பினார்.''வேன்ல வர்ற குழந்தைகள் முக்கியம். அதனால, வேனை முன்னாடி போக சொல்லுங்க. நம்ம கண்காணிப்பில் இருக்கணும்...''இலக்கியன் சொன்னபடி, வேன் கிளம்பி செல்ல, ஜீப் பின் தொடர்ந்தது.இலக்கியனின் ஆட்கள் கூட இருந்ததால், மாணவியரும், வார்டனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. புலிக்குட்டை என்ற பகுதி, அந்த காட்டின் நடுவில் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருந்த சின்ன குளம் போல இருந்தது.அங்கு புலிகள் வந்து தண்ணீர் குடிக்கும். அதனால் அந்த இடத்திற்கு புலிக்குட்டை என்று பெயரிட்டு, ஆதிவாசிகளும், வனத்துறையினரும் அழைத்து வந்தனர்.சிறிது நேரத்திலேயே அந்த இடத்தை அடைந்தனர்.''அந்த மூணு மாணவியரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்...''''சரி சார்...''''முன்பு நடந்தது போல், கோட்டை விட்டுடாதீங்க. டிரைவரை கவனமாக இருக்க சொல்லு... ஜீப்பில் சாப்பாடு பொட்டலமும், தண்ணீரும் இருக்கிறது. அதை எடுத்து வேன்ல இருக்கிறவங்களுக்கு கொடுத்திடு...''சரமாரியாக உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் இலக்கியன்.வேன் டிரைவர் கீழே இறங்கி நிற்க வேனுக்குள் இருந்த வார்டன், அனு, தியா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.''பூஜை... பூஜை... என்று சொல்கின்றனரே... இந்த பிள்ளைகளை வைத்து என்ன செய்ய போறாங்க...'' பதற்றத்துடன் அனுவிடம் கேட்டார் வார்டன்.''தெரியலையே மிஸ்...''''கோவிலை விட்டு தள்ளி வந்து விட்டோமே...''''மிஸ்... இங்கேயும் ஒரு கோவில் இருக்கு. அது ரொம்ப பழமையான கோவில். பாழடைந்து இடிந்து கிடக்கும். ஒருவேளை அங்கே பூஜை செய்கின்றனரோ என்னவோ...''''நம்ம மாணவியரை எல்லாம் காப்பாற்றணுமே...''''யோசிக்கலாம் மிஸ்... டிரைவர் தவிர, எல்லாரும் அங்கே போயிட்டாங்க. இந்த டிரைவரை சமாளித்து தப்பி விட்டால், அங்கே என்ன பூஜை நடக்கிறது என தெரிந்து கொள்ளலாம்...'' என்றாள் தியா.''நான் டிரைவரை அசைய விடாமல் உறைய செய்து விடுவேன். ஆனால், இந்த வேன் கதவை திறக்க வேண்டுமே... அது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது...''யோசனையுடன் சொன்னாள் அனு.''இப்போதைக்கு இங்கு இருந்து தப்ப வேண்டும் என்றால், வெளியில் இருந்து உதவி தேவை...'' என்றாள் தியா.''டிரைவரையே கேட்டு பார்க்கவா...'' என்றார் வார்டன்.''வேண்டம் மிஸ்... அவன் செய்ய மாட்டான்... யோசிப்போம்... ஏதாவது வழி கிடைக்கும்...'' என்றாள் அனு.அவர்கள் வேன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர். அப்போது, அங்கும், இங்கும் உலாவிக் கொண்டிருந்தான் டிரைவர். சற்றுநேரத்தில் அப்படியே உறைந்து நின்றான். ''இப்போ எதுக்கு அவனை உறைய வெச்ச அனு...''தியா கேட்க, ''இல்லக்கா... நான் சும்மாதான் அவனைப் பார்த்தேன். அவன் உறைஞ்சிட்டான்...'' என்றாள் அனு.எதுவும் புரியாமல் குழப்பமாக இருவரையும் பார்த்த வார்டன், ''என்ன சொல்றீங்க... ஆளை உறைய வைக்கிறீங்களா...'' என்றார். பின் திகைப்புடன், ''அந்த டிரைவர் ஏன் அப்படியே அசையாமல் நிற்கிறான்...'' என்று பரபரப்புடன் கேட்டார்.'இனியும் மறைக்க வேண்டாம்' என எண்ணிய தியா, ஆழ்வார்குறிச்சி தோப்புக்கிணறு பற்றியும், அதை தொடர்ந்து கிடைத்த பார்வை சக்தி பற்றியும் சுருக்கமாக கூறினாள்.வியப்பு மேலிட பார்த்த வார்டன், ''இப்படியும் நடக்குமா...'' என்று கேட்டார். அப்போது, வேன் கதவின் தாழ்பாள் விலக்கப்படும் சத்தம் கேட்டது.மூவரும் கதவை நோக்கி திரும்பினர். - தொடரும்...- ஜே.டி.ஆர்.