நாளை வருவான் நாயகன்! (6)
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா, மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்தார் உறவினர் செல்வானந்தம். தாயாரை அழைத்து செல்ல வருவதாக கூறியிருந்தான். இதை அறிந்து, அக்கம் பக்கத்தவரிடம் மகிழ்ச்சியை சொன்னார் லட்சுமி. இனி -தோழி பத்மாவுக்கு பதில் கூறினார் லட்சுமி.''மத்தியானம் ரயிலில் வருவதாக சொன்னதோட தான் இருக்கு... அப்புறம் ஒரு தகவலும் தெரியலயே...''''ம்ம்ம்...''''இப்ப மணி 11:00 தானே ஆகுது... சமைச்சு முடிக்கிறத்துக்கும் அவங்க வர்றதுக்கும் சரியா இருக்கும்...''''அந்த புள்ள வரட்டும்... நாலு கேள்வி கேக்குறேன்... அப்பதான் ஆத்திரம் தீரும்...'' என்றார் பத்மா!உடனே பதட்டமாகி, ''அட யார்டி இவ, நேரங்காலம் தெரியாம...'' என்றார் லட்சுமி.''இப்ப என்னவாம்...''''பழசை பேசி என்ன ஆவப்போகுது... மன கஷ்டம் தான் மிஞ்சும்! இம்மாம் நாள், நான் பட்டதெல்லாம் தலைவிதி... அப்படி நெனச்சுக்கிட்டு போக வேண்டியதுதான்...''''சரிதான்... இருந்தாலும் மனம் பொறுக்கலயே! ம்... பொறுத்து போறத்துக்கே தான், பொண்ணா பொறந்துட்டோம் போலிருக்கு...''புலம்பினார் பத்மா.மதியம் ஆகியும் சூரியராஜா வரவில்லை.சாப்பிடாமல், வாசலில் நின்று தெருவையே பார்த்தபடி இருந்தார் லட்சுமி. நேரம் செல்ல செல்ல உடலும், மனமும் சோர்ந்து போக ஆரம்பித்தன.மாலை 4:00 மணி. வாசலுக்கு வந்த பழனிதுரை, ''கவலையே படாதீங்க... ரயில் தாமதமாக கூட வரும்; பையன் வந்துடுவான்! நீங்க பசியோட இருக்காதீங்க! சாப்பிடுங்கம்மா...'' என்றார்.அப்போது அங்கு வந்தான் ஒரு மாணவன். ஆசிரியர் பழனிதுரையை வணங்கினான். புன்னகைத்த பழனிதுரை, ''பன்னீரு... படிப்புதவி செய்றவங்க யாரும் உனக்கு கை கொடுக்கல... கல்வி கடன் தான் வாங்கியாகணும்! வங்கி மேலாளரைப் பார்த்துட்டேன்! லோனுக்கு சூரிட்டி தான் முக்கியம்ன்னு அடிச்சு பேசுறாரு...''நானும் நாலஞ்சு பேரை கேட்டுட்டேன்; சரியான பதில் வரல! வேற என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்! நாளைக்கு ஒரு நாள் என்னை விட்டுடு! செவ்வாய் கிழமை காலை, 9:00 மணிக்கு வா... ஒரு வி.ஐ.பி.,யிடம் அழைச்சிப் போய் கேட்கிறேன்... உன் அதிர்ஷ்டத்தைப் பார்க்கலாம்...''அது கேட்டு, பதில் எதுவும் சொல்லாமல் பணிவுடன் விடை பெற்றான் அந்த மாணவன்!மாலை 5:00 மணி.லட்சுமியை சாப்பிடும்படி வற்புறுத்தினார் பத்மா.சிறிதளவு சாப்பிட்டார் லட்சுமி. 'மகன் வர மாட்டானோ' என்ற திடீர் கவலை, மனதை அப்பியது.ஆளுக்கு ஆள், 'வந்துடுவான்... வந்துடுவான்...' என்றனர்.சூரியன் மறைந்தது; இருட்டு வந்து விட்டது.இன்னும் சூரியராஜா வரவில்லை.மாலை, 7:00 மணி.எதிர் வீட்டு சிறுவன் வேலுவின் அப்பா லட்சுமணன், படுவேகமாக ஓடி வருவது தெரிந்தது. அவசரமாக, ''சீக்கிரமா கடப்பாரையை கொண்டா... ஒரு விபத்து ஆகிடுச்சு...'' என்று மனைவியை கேட்டார்.வாசலில் நின்ற மனைவி அஞ்சலைக்கும், அந்தப் பதற்றம் தொற்றிக் கொள்ள, ''எதுக்கு கடப்பாரை...'' என்றாள்.''ரோட்டு முனையில, ஒரு ஆட்டோ விபத்து ஆகிடுச்சு... அதுல வந்த கணவன், மனைவிக்கு நல்ல அடி! ஒரு கொழந்தை செத்துருச்சுன்னு சொல்றாங்க! கடப்பாரையால், ஆட்டோவை நெம்பி தான் பேக்கணும்...''கடப்பாரையை எடுத்து வர விரைந்தாள் அஞ்சலை.அப்போது தான் திண்ணையில் வந்து உட்கார்ந்த லட்சுமி காதுகளில், இந்த உரையாடல் விழுந்தது.கடப்பாரையை துாக்கியபடி லட்சுமணன் விரைந்ததை கண்டார்.அஞ்சலையிடம் விவரம் கேட்ட லட்சுமி, ''ஐயோ... மோசம் போயிட்டனே...'' என அலறி வேகமாக நடக்க எத்தனித்தார்; உடல் ஒத்துழைக்கவில்லை.அலறல் கேட்டு ஓடி வந்த பழனிதுரை, ''எதுக்கு வீண் கற்பனை செய்துக்கிட்டு அழுறீங்க... இருங்க நான் போய் பார்த்துட்டு வர்ரேன்...'' என மிதிவண்டியில் விரைந்தார்.லட்சுமியின் உடல் பயந்தால் நடுங்கியது.பத்து நிமிடத்திற்குப் பின் திரும்பிய பழனிதுரை, ''அந்த விபத்துக்கும், உங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது; அவங்க வேற ஆளுங்க... அமைதியா இருங்க... ராத்திரிக்குள்ள மகன் வந்துடுவான்...'' என்றார்.கண்களை துடைத்து வணங்கினார் லட்சுமி.இரவு 8:00 மணிக்கு வந்தார் செல்வானந்தம்.''மத்தியானமே வந்துடுவோம்ன்னு தான் கூறினான்; அப்புறம் போன் எதுவும் பேசல! ஒருவேளை, ரயில் சென்னைக்கு வந்து சேரவே தாமதமாகிருந்தாலும், ரயில்ல இருந்து இறங்கின உடனே போன் போட்டு என்கிட்ட சொல்லலாமே... இந்த காலத்து பசங்க பொறுப்பில்லாம இருக்காங்க...'' கவலையுடன் கரிசனம் காட்டினார். ஒருவழியாக இரவு, 9:00 மணிக்கு அருமைப்புத்திரன் சூரியராஜா ஒற்றை ஆளாக வந்து நின்றான்!கணவர் முத்துமாணிக்கம் நேரில் வந்தது போன்று, லட்சுமிக்கும் தோன்றியது.கண்களை கசக்கி உற்று நோக்கினார் லட்சுமி.''அம்மா... நான் தானம்மா...'' என்றான் சூரியராஜா.''வந்துட்டியா ராஜா... வாடா கண்ணு வா வா...''வேகமாக சென்று கட்டிக் கொண்டார்.தன்னை அறியாமல் குலுங்கி அழ துவங்கினார் லட்சுமி.- தொடரும்...நெய்வேலி ராமன்ஜி