உள்ளூர் செய்திகள்

பூதக்கூண்டு!

முன்னொரு காலத்தில்...திருச்சேரி என்ற ஊரில் வசித்து வந்தார் சாம்பசிவம். சிறுக சிறுக, ஆயிரம் பொற்காசுகள் சேர்த்து விட்டார்; அதை, ஒரு முடிப்பாக கட்டி, பானையில் வைத்து, அதன் மீது துவரம் பருப்பை போட்டு மூடினார்.ஒருமுறை - குடும்பத்துடன் வெளியூர் புறப்பட்டார் சாம்பசிவம். எனவே, துவரம் பருப்பு பானையை, நெருங்கிய நண்பர் பொன்னுசாமியிடம் கொடுத்து, 'நண்பா... இந்த பானை நிறைய துவரம் பருப்பு இருக்கிறது; இதை பத்திரமாக வைத்திருந்து, ஊரில் இருந்து திரும்பியதும் கொடு...' என்றார் சாம்பசிவம்.'அதற்கென்ன, தாராளமாக வைத்து விட்டுப் போ...' என்றார் பொன்னுசாமி.ஒரு நாள் -பொன்னுசாமி வீட்டுக்கு, விருந்தாளிகள் பலர் வந்தனர்.அவர்களுக்கு உணவு சமைக்க துவரம் பருப்பு துளி கூட இல்லை.உடனே, 'சீக்கிரம் துவரம் பருப்பு வாங்கி வாருங்கள்...' என்றாள் அவரது மனைவி.'அவசரத்திற்கு சாம்பசிவம் தந்த பானையில் இருந்து, துவரம் பருப்பு எடுத்துக் கொள். பின், கடையில் வாங்கி நிரப்பலாம்...' என்றார் பொன்னுசாமி.அந்த பருப்பை எடுத்தபோது, பானை அடியில் முடிப்பு தட்டுப்பட்டது.உடனே, பானையை கவிழ்த்தாள்; பண முடிப்பும், துவரம் பருப்புடன் வெளிப்பட்டது.பண முடிப்பை பார்த்தவள், கணவரிடம் தெரிவித்தாள்.பண முடிப்பை பிரித்து நாணயங்களை எண்ணிப் பார்த்தனர். ஆயிரம் தங்க காசுகள் இருந்தன.'இதை எடுத்துப் போய், பத்திரமாக வை; யாரிடமும், எதுவும் சொல்லாதே...' என்றார் பொன்னுசாமி.பின், கடையில் துவரம் பருப்பு வாங்கி வந்தார்.பானை நிறைய துவரம் பருப்பை போட்டு, மூடி விட்டார்.ஊரில் இருந்து திரும்பினார் சாம்பசிவம்.நண்பரிடம் சென்று, 'துவரம் பருப்பு பானையைக் கொடு...' என்று கேட்டார்.'நீ வைத்த இடத்திலேயே இருக்கிறது எடுத்து செல்...' என்றார் பொன்னுசாமி.எடுத்து வந்து பானையை கவிழ்த்தார் சாம்பசிவம்.உள்ளே, பண முடிப்பை காணவில்லை. அவருக்கு, 'பகீர்' என்றது. பொன்னுசாமியிடம் விசாரித்தார்.'உன் பானையை, நான் தொட கூட இல்லை. நீ எப்படி கொடுத்தாயோ, அப்படியே திருப்பி கொடுத்து விட்டேன். மறதியாக, வேறு எங்கோ வைத்து விட்டு, என் பேரில் அபாண்டமாக பழி சுமத்துகிறாய்...' என்றார்.ஏமாற்றம் அடைந்து, மரியாதை ராமனிடம் வழக்குத் தொடுத்தார் சாம்பசிவம்.'ஐயா... வழக்கு சிக்கலானது; பண முடிப்பு உள்ளே இருக்கிறது என்று நீங்கள் ஆரம்பத்திலே அவரிடம் கூறவில்லை. உங்களிடம், 1000 பொற்காசுகள் இருக்கும் என்று யாரும் நம்பவும் மாட்டார்கள்...' என்றார், மரியாதைராமன்.'ஐயோ... நீங்களும் கைவிட்டால் வேறு எங்கே போவேன்...''அவசரப்பட வேண்டாம்... பொன்னுசாமியை விசாரிக்கிறேன்...'உறுதி கூறி அனுப்பினார் மரியாதைராமன்.பொன்னுசாமியை அழைத்து, புகார் குறித்து கூறினார் மரியாதைராமன்.'ஒரு பாவமும் அறியேன்; என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார் சாம்பசிவம்...' 'சரி... நாளைய தினம் உங்கள் மனைவியுடன், ஊர் கோவிலை மும்முறை வலம் வந்து, சத்தியம் செய்ய வேண்டும்...'உத்தரவிட்டார் மரியாதைராமன்.மறுநாள் -ஒரு பூதக்கூண்டை தயாரிக்க சொன்னார் மரியாதைராமன். அதற்குள், யாருக்கும் தெரியாதபடி, ஒற்றனை உட்கார வைத்தார். பொன்னுசாமியும், அவர் மனைவியும் பேசுவதை கவனித்து தெரிவிக்கும்படி அவனுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.மனைவியுடன் பொன்னுசாமி சபைக்கு வந்தார்.சபையில், பூதக்கூண்டு இருப்பதை கண்டனர்.'பூதக் கூண்டை, இழுத்தவாறே கோவிலை மும்முறை சுற்றி வந்து, சத்தியம் செய்ய வேண்டும்...' என்றார் மரியாதைராமன்.இருவரும் கோவிலை வலம் வந்தபடி இருந்தனர். இரண்டாவது சுற்றின் போது, 'ஆயிரம் பொற்காசுக்காக, இந்த பூதக்கூண்டை இழுத்து, சுற்றி வந்து, சத்தியம் செய்கிறோமே...' என்று, வருத்தம் தொனிக்க கூறினாள் பொன்னுசாமி மனைவி.'அதெல்லாம் பார்த்தால் நடக்குமா... ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் போது, இன்னும், 50 சுற்றுகள் வந்து கூட சத்தியம் செய்யலாம்...' என்றார் பொன்னுசாமி.சுற்றுகள் முடிந்தன; சத்தியமும் செய்தனர்.ஒற்றனிடம் உண்மையை அறிந்தார் மரியாதைராமன். ஆயிரம் பொற்காசுகளை வாங்கி, சாம்பசிவத்திற்கு கொடுத்தார். பொய் சத்தியம் செய்த பொன்னுசாமிக்கும், அவர் மனைவிக்கும் அபராதம் விதித்தார்.செல்லங்களே... எப்போதும் நேர்மையாகவும், உண்மையாகவும் வாழவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !