தாய்ப்பாசம்!
சுகவனக் காட்டில், பிரசவ வேதனையால் துடித்து கொண்டிருந்தது மான்.சிறிது நேரத்தில், பிறக்கப் போகும் குட்டியை, நினைத்து சந்தோஷம் ஏற்பட்டது.அதே நேரம், அங்கு வந்தது புலி. மானை ருசித்து சாப்பிட விரும்பி நின்றது.இதைப்பார்த்ததும், 'ஐயோ கொன்று விடுமே... என்ன செய்வேன்; என் குட்டியின் முகத்தை கூட பார்க்க முடியாத துரதிஷ்டசாலியாகி விட்டேனே' என எண்ணியது மான்.கலக்கத்துடன், 'என்னை தின்ன துடிக்கிறாய் என்பது நன்கு புரிகிறது புலியே... அதற்கு முன், என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கருணை காட்டு...' என்றது மான்.'உன் வேண்டுகோள் என்ன என்று கூறு...' 'சிறிது நேரத்தில் குட்டியை ஈன்று விடுவேன். அதை பார்த்த பின் உனக்கு இரையாகிறேன்..' என்றது.சம்மதித்தது புலி.குட்டியை ஈன்று கொஞ்சியது மான். பின், புலி முன் வந்து, 'பெற்றக் குட்டியை பார்த்து விட்டேன்; அதை காப்பாற்றி வளர்ப்பது இறைவன் கையில் உள்ளது; இப்போது, என்னை தின்று பசியை போக்கி கொள்...' என்றது. இதைக் கேட்டதும், புலிக்கு இரக்கம் பிறந்தது.'நீ இறந்து விட்டால், குட்டிக்கு யார் பாலுாட்டுவார்... பட்டினியாக இருக்குமே... நானும், நான்கு குட்டிகளை ஈன்றேன்; ஒரு தாயின் வேதனையும், மகிழ்ச்சியும் எனக்கு தெரியும்... 'கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிக்கும், உன் உயர் குணத்தை பாராட்டுகிறேன்... நான் ஊன் உண்ணும் மிருகம் தான். ஆனாலும், தாய்மை பண்பு அற்றுப்போய்விடவில்லை. உன்னை கொன்று உண்ண விரும்ப வில்லை. உன் அழகியக் குட்டியை நன்றாக கவனித்து கொள்...' நெகிழ்வுடன் சொல்லி, பசியுடன் புறப்பட்டது புலி.குட்டியை அணைத்து, பாலுாட்ட துவங்கியது மான்.குழந்தைகளே... தாய்ப்பாசம் மிக உயர்வானது; அதை உணர்ந்து, அம்மாவை மதித்து பணிவுடன் நடப்பதே பண்பான செயல்.