அதிமேதாவி அங்குராசு - தாயின் மணிக்கொடி!
உலகில், ஒவ்வொரு நாட்டிற்கும் தேசியக்கொடி இருக்கிறது. நம் தேசியக்கொடி மூவண்ணம் உடையது. சுதந்திரம் வாங்கும் முன்பே இந்த கொடி உருவாகி விட்டது. கொடியை காக்க உயிரையே தியாகம் செய்துள்ளார் திருப்பூர் குமரன். நம் தேசியக்கொடி உருவான வரலாறை பார்ப்போம்...சுதந்திரப் போராட்டத்தில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த ஒரு கொடி தேவைப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதா முதன்முதலாக ஒரு கொடியை, 1904ல் உருவாக்கினார். சிவப்பு வண்ணம், சதுர வடிவில், மஞ்சள் நிறத்தின் நடுவில் வெண் தாமரையை கொண்டிருந்தது. இதில், 'வந்தே மாதரம்' என்ற சொல் இடம் பெற்றிருந்தது. சிவப்பு நிறம் சுதந்திரப் போரையும், மஞ்சள் வெற்றியையும், வெள்ளை துாய்மையின் அடையாளத்தையும் குறிப்பதாக இருந்தது.சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட் இணைந்து ஒரு கொடியை உருவாக்கினர். அதில், ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை நிற படுக்கை கோடுகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் விஜயவாடாவில் நடந்த போது, ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா, ஒரு கொடியை காந்திஜியிடம் வழங்கினார். அதில் வெள்ளை நிறம் மற்றும் சுழலும் சக்கர வடிவத்தை பொறிக்க ஆலோசனை கூறினார் காந்திஜி. தற்போதைய பாகிஸ்தான் கராச்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கூடிய போது, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த கொடியை ஏற்றது. போராட்டங்களின் போது அது பயன்படுத்தப்பட்டது.சுதந்திரத்துக்கு முன், தேசியக் கொடி பற்றி முடிவு செய்ய ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்த குழு, ஜூலை 14, 1947ல் ஒரு முடிவுக்கு வந்தது. கொடியில் மதச்சாயல் இருக்கக் கூடாது; அத்துடன் சாரநாத், சாஞ்சி ஸ்துாபியில் உள்ள தர்ம சக்கர வடிவத்தை பதிக்கவும் பரிந்துரைத்தது. அதன்படி, கொடியின் நீள அகல விகிதம், 3:2 என முடிவு செய்யப்பட்டது. காவி வண்ணப் பட்டை மேல்புறத்திலும், பச்சை, கீழ் புறத்திலும், இடையே வெள்ளை நிற பட்டையும், நடுவில் நீல வண்ண தர்ம சக்கரம், 24 ஆரக்கால்கள் உடையதாக அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை இதை அங்கீகரித்தது. இக்கொடி, முதன் முதலாக சுதந்திர இந்தியாவில் ஆக., 15, 1947ல் பட்டொளி வீசி பறந்தது. பிங்கலி வெங்கைய்யா!மூவண்ணக் கொடியை உருவாக்கிய பிங்கலி வெங்கைய்யா, ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து, தென்ஆப்ரிக்காவில் நடந்த போயர் யுத்தத்தில் பங்கேற்றார். அங்குதான், இந்தியாவுக்கும் தேசியக் கொடி உருவாக்கும் ஆசை துளிர் விட்டது. அதை, காந்திஜியை சந்தித்தபோது தெரிவித்தார்.சென்னை, மாநில கல்லுாரியில் ஜியாலஜி என்ற நிலவியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். மைக்கா குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். வைரச் சுரங்கம் பற்றி அனுபவ அறிவு பெற்றவர். சுதந்திரப் போராட்ட வீரர், காந்தி அடிகளின் சீடர், கொடி வடிவமைப்பாளர், கனிம இயல் வல்லுநர், பன்மொழி வித்தகர் என பன்முகங்கள் உடையவர் பிங்கலி வெங்கைய்யா. காந்திய தத்துவத்தை பின்பற்றி எளிமையாக வாழ்ந்தார்.தேசிய கொடியில்... காவி நிறம் தைரியம், தியாகத்தை குறிக்கும் வெண்மை நிறம் உண்மை, அமைதியை குறிக்கும் பச்சை நிறம் நம்பிக்கை, பசுமை மற்றும் செழிப்பை குறிக்கும் நடுவில் இடம் பெற்றுள்ள சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிப்பிடும்.தேசியக் கொடியை கையாளவும், உரிய மரியாதை செலுத்தவும் இந்திய தேசியக் கொடி சட்டம் - 2002ல் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள்...* தேசியக் கொடியை விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது * கிழித்தல், எரித்தல், அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றம்* அணியும் உடை, கைத்துண்டாக பயன்படுத்தக் கூடாது* மண், தரை, தண்ணீரில் படும்படி பறக்கவிடக் கூடாது* கிழிந்த நிலையிலோ, நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது* தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படாத வகையில் கையாள வேண்டும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.