சத்தும் சக்தியும்!
திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில், 1995ல், 5ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்... அன்று, மதிய உணவு இடைவேளையில், பள்ளி மைதானத்தை சுற்றி வந்தார் தலைமை ஆசிரியர் அ.நாராயணசாமி. மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுவதை ஆய்வு செய்தார். முள்ளங்கி, பீன்ஸ், கேரட் மற்றும் பீட்ரூட் கலந்த குழம்பு வைக்கப்பட்டிருந்தது. உணவில், காய்கறிகளை உண்ணாமல் ஒதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தார்.மறுநாள், இறை வழிப்பாட்டு கூட்டத்தில், 'மதிய உணவில் சத்து மிக்க காய்கறிகளை உண்ணாமல் புறக்கணித்திருந்ததைக் கண்டேன். இதை தொடர்ந்தால் உங்களை சக்தியில்லாதவர் என ஒதுக்கி வைத்து விடுவர் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்...'இனி காய்கறிகளை, உண்ணாமல் ஒதுக்குவோருக்கு முட்டிப் போடும் தண்டனை வழங்கப்படும். உரிய அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்...' என எச்சரித்தார். அந்த நடவடிக்கைக்கு பயந்து, காய்கறிகளையும் புசித்து திடம் பெற்றோம். உடல் ஆரோக்கியத்துடன், படிப்பில் கவனம் செலுத்தி, வெற்றிகளை குவித்தோம். தற்போது என் வயது, 37; இன்சூரன்ஸ் கம்பெனி முகவராக பணியாற்றுகிறேன். பள்ளி பருவத்திலே, ஆரோக்கியம் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அந்த தலைமை ஆசிரியரை போற்றுகிறேன்.- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.தொடர்புக்கு: 85249 06220