விழுந்தது சட்டை மட்டுமா...
ஒரு நாள் - வீட்டின் மாடியில் உட்கார்ந்திருந்தார் முல்லா. அவரது மனைவி, அறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். திடீரென்று, 'தடால்' என்ற சத்தம் கேட்டது.இதை கேட்டதும், 'என்ன ஆச்சு...' என்று குரல் கொடுத்தாள் முல்லா மனைவி.உடனே, 'கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை. காற்றில், என் சட்டை கீழே விழுந்து விட்டது, அவ்வளவுதான்...' என்றார் முல்லா. சத்தம் கீழிருந்து கேட்டது.மிகுந்த ஆச்சர்யத்துடன், அவசரமாக, 'சட்டை விழுந்தால், இப்படியா சத்தம் கேட்கும் நம்ப முடியவில்லையே...' என்றபடி, மாடிக்கு ஓடினாள் முல்லா மனைவி. அங்கே முல்லாவை காணவில்லை. பரபரப்புடன் இறங்கி வந்தாள். இப்போதும் சத்தம் கீழே கேட்டது.'ஒன்றுமில்லை... பயப்படாதே, சிறு காயம் தான்... எடுத்த எடுப்பில் சொல்லி, உன்னை கவலைப்பட வைக்க விரும்பவில்லை. அதாவது, விழுந்த சட்டைக்குள் நான் இருந்ததே, பலத்த சத்தத்துக்கு காரணம்...'மிக அமைதியாக சொல்லியபடி வீட்டிற்குள் சென்றார் முல்லா.குழந்தைகளே... எது நடந்தாலும், நிதானம் தவறக்கூடாது.