உழைப்புக்கு மரியாதை!
துாத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு முடித்தேன். அடுத்து, எஸ்.எஸ்.எல்.சி.,யில் விருப்ப பாடம் தேர்வு செய்ய வேண்டும். கணித பிரிவில் சேரும்படி சிபாரிசு செய்திருந்தார் வகுப்பாசிரியர். அதற்கு நான் சம்மதிக்காததால் தலைமை ஆசிரியர் அ.சிவசங்கரன் பிள்ளையை சந்திக்க அறிவுறுத்தினார். பாட்டியுடன் சந்தித்த போது, 'கணிதம் படிக்க மறுக்கிறானே...' என கேட்டார். நிதானமாக, 'என் பேரன், காலையில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வைப்பான். கேழ்வரகை திரித்து கொடுப்பான். நாட்டு கம்புவை உரலில் இடித்து, கஞ்சி காய்ச்ச உதவுவான். சமையலுக்கு விறகு சேகரித்து தருவான். இதுபோல் குடும்பத்துக்கு உதவி வருகிறான். கணித பிரிவில் சேர்ந்தால் இவற்றை எல்லாம் செய்ய முடியாது. வகுப்பில் கூடுதலாக நேரம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் தான் மறுக்கிறான்...' என கூறினார் பாட்டி.இதை கேட்டு நெகிழ்ந்தவர், 'பிள்ளை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். விருப்பப்படியே உயிரியல் பிரிவில் சேர்ந்து கொள்...' என வாழ்த்தினார். காந்திய தத்துவத்தை பின்பற்றி வாழ்ந்த அவர், இறைவணக்க கூட்டத்திலும் என் செயல்களை பாராட்டினார்.எனக்கு, 64 வயதாகிறது; அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக, 27 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். உழைப்பை மதித்து போற்றிய அந்த தலைமை ஆசிரியரை வணங்குகிறேன்.- அ.லோகிதாசன், துாத்துக்குடி.தொடர்புக்கு: 96778 77075