சாது மிரண்டால்!
காட்டின் நடுவில் இருந்த குளத்தை சுற்றி அழகிய பூஞ்சோலை. அதில், பட்டாம் பூச்சிகள் கூட்டமாக வசித்து வந்தன. பூக்களில் தேன் உண்டு, குளத்தை வலம் வந்து மகிழ்ந்தன.ஒரு நாள், தேனீ ஒன்று அந்தச் சோலையை சுற்றியது; பூக்களில் தேன் குடித்து பறந்துச் சென்றது.இதை கவனித்த வயதான பட்டாம்பூச்சி, கூட்டமாக பறந்த வாலிப பூச்சிகளிடம் இது குறித்து விபரம் தெரிவித்தது. 'இதெல்லாம் பெரிய விஷயமா... பாவம், தேனீ தானே வந்தது; அதுக்கு போய் ஏன் பயப்படுறீங்க...' என்றது ஒரு பட்டாம்பூச்சி.'எனக்கு இது சாதாரண நிகழ்வாக தெரியல...' வருத்தத்துடன் கூறியது வயதான பட்டாம்பூச்சி.மறுநாள் நாலைந்து தேனீக்கள் வந்தன; அவை சோலையை சுற்றி பறந்து, தேனை பருகின. அவற்றை தடுக்கும் வகையில், 'நீங்க எல்லாம் இந்த பக்கம் வரக்கூடாது; இது நாங்கள் பல ஆண்டுகளாக வசிக்கிற இடம். வேறு இடத்தில் உணவை தேடிக் கொள்ளுங்கள்...' என அன்பொழுக கூறியது வயதான பட்டாம்பூச்சி. இதை கண்ட வாலிப பட்டாம்பூச்சி, 'தாத்தா... வேற வேலையே இல்லையா... பாவம், அதுங்க எங்கெங்கோ சுற்றி அலைந்து தேனை சாப்பிட்டு போகுதுங்க... மிரட்டுறது நியாயமா...' என்றது.'அதுங்க இங்க எங்காவது கூடு கட்ட ஆரம்பிச்சா... நமக்கு உணவு கிடைக்காமல் போயிடும்; தெரிஞ்சுக்கோங்க...' என்றபடி அகன்றது.இரண்டு நாட்களுக்குப் பின் -படை எடுத்தது போல் வந்தது தேனீ கூட்டம். சோலையில் மலர்ந்திருந்த மொத்த பூக்களிலும் அமர்ந்து தேன் உறிஞ்சின.தினமும் இது வாடிக்கையானது.உணவு கிடைக்காமல் தவித்தன பட்டாம்பூச்சிகள்.வயதான பட்டாம்பூச்சி எச்சரித்தது அப்போது தான் புரிந்தது.வாலிப பட்டாம்பூச்சி ஒன்று, 'தாத்தா சொன்னது போல நடந்துடுச்சே... இப்போ என்ன செய்றது...' என்றது. 'ஒண்ணு செய்யலாம்... அதுங்கள வரவிடாம, திரும்ப அனுப்பிடலாம்...' என பதில் சொன்னது ஒரு பட்டாம்பூச்சி. எல்லாம் அதற்கு ஒத்து ஊதின.இதைக்கேட்டு வயதான பட்டாம்பூச்சி மனதில் சிரித்தது.மறுநாள் -தேனீக்கள் பறந்து வரும் வழியில், பட்டாம்பூச்சிகள் கூடி நின்றன.தேனீக்களைப் பார்த்து, 'இது நாங்க ரொம்ப காலமா வாழுற இடம்; இதை விட்டா எங்களுக்கு வேற இடம் தெரியாது... நீங்க தினமும் எல்லா தேனையும் சாப்பிடுறீங்க. எங்களுக்கு உணவு கிடைக்கல... இனிமேல் இந்த பக்கம் வராதீங்க...' என்றன.தேனீக்கள், அதை கண்டு கொள்ளவில்லை. அவை வழக்கம் போல் பூக்களில் அமர்ந்து தேன் சாப்பிட்டன. கோபமடைந்து சண்டைக்கு சென்றன பட்டாம்பூச்சிகள்.தேனீக்கள் திருப்பி தாக்கியதால் நிலைகுலைந்தன பட்டாம்பூச்சிகள்.இருப்பிடம் திரும்பி வயதான பட்டாம்பூச்சியை சந்தித்து யோசனை கேட்டன.'சரி... அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கலாம்; எல்லாரும் நாளை வாங்க... ஒரு யோசனை சொல்றேன்...' என்றது வயதான பட்டாம்பூச்சி.மறுநாள் பட்டாம்பூச்சிகள் திரண்டன. தொண்டையை செருமியபடி, 'நம்ம தோட்டத்தின் அருகே ஒரு குளம் இருக்கு. அங்கே, ஒரு கரடி தினமும் தண்ணி குடிக்க வரும்... அது கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம். ஆனா, அதுக்கு முன், தேனீக்களின் ராணியிடம், இந்த விஷயத்தை சொல்லி நியாயம் கேட்போம்...' என்றது வயதான பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிகள், தேனீக்களின் கூட்டைத் தேடிச்சென்றன. ஒரு மரத்தில் தேன்கூடு இருந்தது; அதன் வாசலைத் தட்டி, ராணிதேனீயைப் பார்க்க அனுமதி கேட்டன.'என்ன பிரச்னை... யாரு அங்கே...' கேட்டபடி ராணி தேனீ வந்தது.விஷயத்தை கேட்டதும், பட்டாம் பூச்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அந்த நந்தவனத்தை விட்டு கொடுக்க மறுத்தது. பேச்சு வார்த்தை முறிந்ததால் பட்டாம்பூச்சிகள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தன.அடுத்தக்கட்ட திட்டத்தை தயாரிக்க யோசித்தன.அப்போது நீர் அருந்த வந்த கரடியை சந்தித்து, நலம் விசாரித்தது வயதான பட்டாம்பூச்சி.மிகுந்த சோகத்துடன், 'சாப்பிடுறதுக்கு எதுவுமே கிடைக்கல; பசியும், பட்டினியுமா காலந்தள்ளுறேன். உன்ன மாதிரி இருந்தா, பறந்து போயி, தேன் குடிச்சு மகிழலாம்...' என்றது கரடி.'கவலைப்படாதே... உனக்கு, பெரிய விருந்தே தரேன்...' என்றபடி தேன்கூடு இருக்கும் இடத்துக்கு கூட்டி சென்றது பட்டாம்பூச்சி. சிறிதும் தாமதிக்காமல் மரத்தில் ஏறி, பசியைப் போக்கிக்கொண்டது கரடி.தேனீக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குழந்தைகளே... முரண்டு பிடிக்காமல், மற்றவர்களுடன் இயைந்து வாழ பழக வேண்டும்.- எஸ்.நீலாவதி