உள்ளூர் செய்திகள்

அதிர்ச்சியும் திருப்பமும்!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 11ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...தலைமையாசிரியராக இருந்தார் துரைசாமி நாடார், மிகவும் கண்டிப்பானவர்; ஆங்கில பாடம் சிறப்பாக நடத்துவார்; மாணவர் நலனில் அதிக அக்கறை காட்டுவார். ஒரு நாள், வீட்டுப் பாடம் எழுதாமல் சென்ற என்னிடம், 'உன் அப்பாவுக்கு என்ன வேலை...' என கேட்டார். கண்களில் நீர் ததும்ப, 'தந்தை இறந்து விட்டார்; அம்மா கூலி வேலை செய்கிறார்...' என்றேன். யோசனையில் ஆழ்ந்தவர், அன்று பாடம் நடத்தவில்லை. எங்களை விளையாட்டு மைதானத்துக்கு அனுப்பி, அலுவலகம் சென்று விட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அழைத்தார். பதைபதைப்புடன் சென்றேன். சில நோட்டு புத்தகங்களை தந்து, 'கவனமாகப் படி... ஏதாவது தேவை என்றால் தயங்காமல் கேள்...' என, பரிவுடன் கூறினார். கவனம் செலுத்தி படித்தேன். தொடர்ந்து ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்தேன். பணியில் உயர்ந்து தலைமையாசிரியராக பொறுப்பு வகித்தபோது, குறும்பு செய்த மாணவன் வேலுசாமியிடம், 'உன் அப்பா கண்டிப்பது இல்லையா...' என கேட்டேன். தந்தை இறந்து விட்டதாக கூறினான்.அதிர்ச்சி அடைந்தேன். மாணவ, மாணவியர் மனநிலை மற்றும் குடும்ப சூழல் அறிந்து செயல்பட வேண்டும் என அன்று தீர்மானித்தேன். அது போன்ற மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உதவிகள் செய்தேன். தற்போது, என் வயது, 83; வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை இன்றும் மறக்க முடியவில்லை. - ஆர்.சாமிபிள்ளை, திருப்பூர்.தொடர்புக்கு: 94424 81188


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !