உள்ளூர் செய்திகள்

குருவான குழந்தை!

மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்துார், தொடக்கப் பள்ளியில், 1988ல் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். குழந்தைகளுக்கு எழுத்துக்களையும், எண்களையும் அறிமுகம் செய்யும் பொறுப்பு மிக்க பணி. முதல் வகுப்பு குழந்தைகளுக்கு, தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்து, 'ஆனா, ஆவன்னா' எழுதி காட்டும் படி பணித்தேன். காயத்ரி என்ற குழந்தை, 'ஆனா, ஆவன்னா' என்று எழுதி இருந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். 'அ, ஆ' என்று தானே எழுத வேண்டும் என, கேள்வி எழுப்பினேன். அதற்கு அந்த சுட்டிக்குழந்தை, 'நீங்கள் 'அ, ஆ' எழுதும் படி சொல்லவில்லை... 'ஆனா, ஆவன்னா' தானே எழுத சொன்னீர்கள்' என்று பதில் கேள்வி எழுப்பினாள். அன்று முதல் தமிழ் எழுத்துக்களையும், சொற்களையும் மிகவும் கவனமாக, உச்சரிப்பு தெளிவுடன் தான் கூறுகிறேன். 'ஒண்ணு, ரெண்டு' என்று சொல்லாமல், 'ஒன்று, இரண்டு...' என்று தெளிவாக கற்றுத்தருவதால், மாணவர்களும் அதே உச்சரிப்பை பின்பற்றுகின்றனர்.தற்போது என் வயது, 55. தொடர்ந்து ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எல்லாருக்கும் ஆசிரியர் தான் குருவாக இருப்பர்; ஆனால், எனக்கு காயத்ரி என்ற அந்த குழந்தை தான் குருவாக இருந்திருக்கிறார். - பா.புவனேஸ்வரி, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 99448 24278


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !