இளஸ் மனஸ்! (301)
அன்புள்ள அம்மா...என் வயது, 38; தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என் மகனுக்கு, 12 வயதாகிறது. தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். 'வீட்டுல வைத்திருத்த பணம் 100 ரூபாய் காணல... நீ பாத்தியா...' என கேட்டால், சிறிதும் தாமதிக்காமல், 'அப்பா மேல சத்தியமா நான் எடுக்கல...' என்பான். அவனிடம், 'வீட்டுப்பாடம் செய்யாம போய் வாத்தியாரிடம் அடி வாங்னியாமே...' என விசாரித்தால் தயங்காமல், 'பள்ளிக்கூடம் மீது சத்தியமா அப்படி எதுவும் நடக்கல...' என்பான். எதைப் பற்றி விசாரிக்க கேட்டாலும் எதன் மீதாவது சத்தியம் பண்ணி விடுவான். 'பக்கத்து தெரு பையனை கிரிக்கெட் பேட்டால் அடிச்சியாமே...' என விசாரித்தால், 'யார் சொன்னது... விராத் கோலி மீது சத்தியமா நான் அடிக்கல...' என மறுத்து சபிப்பான். சத்தியம் செய்வதும், சபிப்பதும் அவனது இருகண்களாக உள்ளன. அவன் நடத்தையை மாற்ற நல்ல அறிவுரை கூறுங்கள்.-இப்படிக்கு, எம்.எம்.ஷாஜாதி பீவி. அன்புள்ள சகோதரிக்கு...ஒருவன் தரப்பு நியாயத்தை, உறுதிபடுத்த சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத இக்கட்டான நிலையில் ஒரே நம்பிக்கையாக உள்ள சொல் சத்தியம். பொதுவாக மனிதன் தான் கூறுவதை மற்றவர் நம்பவேண்டும் என நினைப்பான். அதை நியாயப்படுத்த, கொண்டு வரும் வார்த்தை தான் சத்தியம். சத்தியம் செய்வது குறித்து மதங்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன. சத்தியம் செய்வதில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்...* மனவலியை போக்கி ஆழ அகலமான உணர்வுகளை உயர்த்தி காட்டும்* நேர்மையும், நம்பகத்தன்மையும் வெளிப்படும்* மனிதசெயல்பாடு மேம்படும்* மனஅழுத்தத்தை போக்கும் வடிகாலாய் அமையும்* சத்தியத்தால் தன்னம்பிக்கை கூடும். சமூக நிராகரிப்பை சத்தியம் திடமாய் எதிர்த்து நிற்கிறது. உலகில், 'டைப் ஏ' என்ற ஆளுமை உள்ளோர் தான் அதிகம் சத்தியம் செய்வர்.சத்தியம் செய்வதில் உள்ள தீமைகள்...* அடிக்கடி சத்தியம் செய்வது முரட்டுத்தனத்தையும், வன்முறை குணத்தையும் வெளிபடுத்தும்* மோசமான தகவல் தொடர்பு திறன் உடையோர் எதற்கும் சத்தியம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுவர்* புத்திசாலித்தனம் மிகக்குறைவாக இருக்கும்* இழி நடத்தையும், சமூக ஒழுங்குக்கு கட்டுப்படாத ஒழுங்கீனமும், அதீத மத நம்பிக்கையும், கூடுதல் சத்தியம் செய்வோரின் அடையாளமாக இருக்கும். கூடுதல் சத்தியங்கள் அவநம்பிக்கையை பரிசளிக்கும். சத்தியம் செய்வதை நம்புவது ஆளுக்காள் வேறுபடும். கலாசாரங்களும், சூழலும் சத்தியத்தின் நன்மை தீமையை தீர்மானிக்கின்றன.உன் மகனின் சத்தியங்கள், பிரச்னைகளில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கும் உத்தி. அவனிடம், 'நீ செய்யும் ஒரு சத்தியம் பொய் என நிரூபணம் ஆனால் பின் நீ செய்வதை யாரும் நம்ப மாட்டர். ஆகவே அதை முற்றிலும் குறை. நேர்மையான நடத்தையால் நம்பகத்தன்மையை உயர்த்து...' என அறிவுரைக்கவும். உன் மகனை சர்வபொழுதும் குற்றம் சாட்டும் தோரணையில் கேள்வி கேட்க வேண்டாம். உடல்ரீதியான அரவணைப்பை கூட்டி சாந்தப்படுத்து. சத்தியத்தையும், சாபத்தையும் உன் மகன் விட்டு தொலைக்க தேவையான வீட்டு சூழலை உருவாக்கவும். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.