உள்ளூர் செய்திகள்

நெகிழ்வால் நெருக்கம்!

தஞ்சாவூர், கல்யாண சுந்தரம் மேல்நிலைப்பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்த போது கணித ஆசிரியையாக இருந்த பத்மினி கண்டிப்பு மிக்கவர். பாடங்களை தெளிவாக கற்பிப்பார். ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் அவர் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியே, 'கப்சிப்' என அமைதியாகிவிடுவோம். பாடங்களை புரிய வைக்க சிரத்தை எடுப்பவர், கண்டிப்புடன் செயல்பட்டதால் நெருங்கவே முதலில் பயம் இருந்தது. நெகிழ்வான நடவடிக்கையால் அது விலகியது. பாடங்களில் ஏற்படும் ஐயத்தை எப்போது கேட்டாலும் சலிப்பின்றி விளக்குவார். எத்தனை முறையானாலும் தவிர்க்க மாட்டார். அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து பொதுத்தேர்வில் 99 மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று பாராட்டு பெற்றேன். தொடர்ந்து கவனமுடன் படித்து உயர்ந்தேன். என் வயது, 46. தஞ்சை அரசு கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். பின், தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். இது போன்ற உயர்வுகள் ஆசிரியை பத்மினி வகுப்பறையில் போட்ட அடித்தளத்தால் அமைந்தது. அவருக்கு பணிவையும், நன்றியையும் சமர்ப்பிக்கிறேன். - ஜி.முத்துலெட்சுமி, ராமநாதபுரம். தொடர்புக்கு: 79049 85631


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !