உள்ளூர் செய்திகள்

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (7)

முன்கதை: பள்ளி மாணவன் மகிழ், வளர்ப்பு மிருகங்கள் மீது அன்பு கொண்டு கற்பனையில் சஞ்சரித்து வந்தான். அவன் ஆர்வத்தை அறிந்து, காவல்துறையில் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானை தத்தெடுத்தார் அவன் தந்தை. அதை அழைத்து வந்தனர். பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் குடியிருப்பின் செயலர். இனி - அடுக்குமாடி குடியிருப்பின் செயலர் தொடர்ந்து கத்தினார். அவர் முன், நின்றான் மகிழ்; அவனுக்கு நெருக்கமாக நின்று செயலரை முறைத்தது செங்கிஸ்கான்.''செயலரே... கத்தாதீர். ஏற்கனவே உங்களுக்கு பி.பி., இருக்கிறது; காச்சுமூச்சுன்னு கத்தி இதயம் நிற்க போகிறது...''''இந்த நக்கல் பேச்சு என்னிடம் வேண்டாம்...''''நேரடியாகவே கேட்கிறேன்; அடுக்குமாடி குடியிருப்புகளில், நாய் வளர்க்க கூடாது என, தமிழக அரசு ஏதாவது சட்டம் போட்டுள்ளதா... அதற்கென, நம் குடியிருப்பு சங்கம், விதிகளையும், நிபந்தனைகளையும் உருவாக்கி உள்ளதா...''''இல்லை...''''அப்படியென்றால், உங்களுக்கு என்ன பிரச்னை...''''இங்கு, 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர்; யாரையாவது இந்த நாய் கடித்தால்...''''செங்கிஸ்கான்... கடிக்க மாட்டேன் என சொல்...''ஓடிப்போய், ஒரு சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டு, திரும்பியது. 'கடிக்க மாட்டேன்; இது சத்தியம்...'ராகமாய் ஊளையிட்டது செங்கிஸ்கான். ''செங்கிஸ்கானுக்கு ராபிஸ் நோய் இருந்தால்...''''எல்லா தடுப்பூசிகளும், போடப்பட்டுள்ளன...''''இந்த நாய் குடியிருப்பு வாசல், வராண்டாக்களில், மலம் கழித்தால் என்ன செய்வது...''''என் செங்கிஸ்கான் ஒழுக்கமானவன்; மீறி நடந்தால், நீங்கள் கூறும் தொகையை அபராதமாக செலுத்துகிறோம்...''''தொடர்ந்து, மூன்று முறை இக்குற்றம் நடந்தால், நீங்கள் வசிக்கும் வீட்டை யாருக்காவது, வாடகைக்கு விட்டு, வேறு இடம் பார்க்க வேண்டிய சூழல் வரும். இதில் மாற்றம் ஒன்றும் இல்லையே...''''செயலரே... அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு, காது சரி வர கேட்காது. கண்ணும் தெரியாது. இரவில், துாங்குவார். இனி, அவர் வேலையையும் சேர்த்து பார்க்க போகிறது என் செங்கிஸ்கான். நம் பாதுகாப்புக்கு, ஒற்றை ஆள் ராணுவத்தை அழைத்து வந்துள்ளேன். பாராட்டாமல் குறை கூறுகிறீர்...''''அடுக்குமாடி குடியிருப்புக்குள் நாய் வளர்க்கப் போகிறான் மகிழ். இதில், உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா...''கூடி நின்ற கூட்டத்திடம் கேட்டார் செயலர்.'ஒரு மாதம் செங்கிஸ்கானுக்கு நன்னடத்தை காலம் வழங்குவோம்; அது நல்லபடியாக தெரிந்தால், இங்கேயே ஆயுளுக்கும் இருக்கட்டும். ஏதாவது ஏடாகூடம் செய்தால் இங்கிருந்து அனுப்பிவிடலாம்...'கூட்டத்தில் பலரும் ஒன்றாக குரலை உயர்த்தினர்.''செயலரே... நான் ஒரு கரடி வளர்க்க போகிறேன்; அனுமதி உண்டா...'' கிண்டல் செய்தார் குடியிருப்பில் வசித்த குறும்புக்கார ஆசாமி ஒருவர். இதைக் கேட்டதும், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.''நீங்க பேய் கூட வளர்த்துக்கலாம்...''''ஒரு பேய், மற்றொரு பேயை வளர்க்குமா...''மீண்டும் சிரிப்பலை படர்ந்தது.''நான் ஒரு மலைப்பாம்பு வளர்க்க ஆசைப்படுகிறேன்...''மற்றொருவர் குறும்பு தொனிக்க கேட்டார்.கூட்டம் திகில் மவுனம் காத்தது.''வன அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்களே...''பட்டென பதில் கூறினார் செயலர்.''முயல்...''''அது எவ்வளவு சாதுவான மிருகம். தாராளமாக வளர்க்கலாம்...''''கிளி, பன்றி...''''அவை தான் இங்கு இருக்கிறதே... அவற்றையும் வளர்க்கலாம்...''இப்படி உரையாடல் நடந்து கொண்டிருந்த போதே, குடியிருப்பின் ஒட்டு மொத்த குழந்தைகளும் செங்கிஸ்கானை நோக்கி ஓடி வந்தனர்.அருகில் நின்று, செங்கிஸ்கானின் கண்களை உற்று நோக்கினர். அந்த நாயின் கண்களில் கருணை வழிந்தது கண்டு வியந்தனர்.தாத்தா, பேரக் குழந்தைகளை வாஞ்சையுடன் நோக்குவது போல் பார்த்தது செங்கிஸ்கான்.இரு பின்னங்கால்களில் அமர்ந்தபடி, முன்னங்கால்களை விரித்தது. குழந்தைகள் தாவி, செங்கிஸ்கானை கட்டி அணைத்தனர்.'பாற்கடல் அடுக்குமாடி குடியிருப்புக்கு செங்கிஸ்கானை அன்புடன் வரவேற்கிறோம்...'குழந்தைகளின் உற்சாக வரவேற்பு விண்ணை முட்டியது.ஒரு குழந்தை, சாக்லெட்டை எடுத்து, செங்கிஸ்கானுக்கு ஊட்டியது. பாசத்தில் உறைந்து கிடந்த செங்கிஸ்கானை புகைப்படம் எடுத்தான் மகிழ்.கட்டி அணைத்த குழந்தைகள், தன்னை உதறி தள்ளும் காலம் சீக்கிரம் வரும் என்பதை சிறிதும் உணரவில்லை செங்கிஸ்கான்.- தொடரும்..ஆர்னிகா நாசர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !