படைப்பின் பயன்!
திருப்பூர், நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 10ம் வகுப்பில் படித்தபோது, புதிதாக சேர்ந்திருந்தார் ஆங்கில ஆசிரியர் ரங்கசாமி. அன்று திங்கள் கிழமை காலை வகுப்பில் தமிழ் நாளிதழில் பிரசுரமாயிருந்த ஒரு சிறுகதையை வாசித்தார். எழுதியவர் பெயர் அல்லி என போட்டிருந்தது. அடுத்த நொடி, கை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து கூறினோம்.வியப்புடன், 'நான் தான் இதை எழுதினேன் என எப்படி கண்டுபிடிச்சீங்க...' என கேட்டார். தயங்காமல், 'உங்கள் விரலில் அல்லி என்ற பெயர் பொறித்த மோதிரம் போட்டிருக்கீங்களே...' என்றோம். சிரித்தபடியே, 'அது என் துணைவி பெயர். அந்த பெயரில் தான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன்...' என்றார்.எங்கள் புகழுரை கேட்டு நெகிழ்ந்தவர், 'இதுபோல் நீங்களும் முயற்சித்து எழுதினால் புகழ் பெறலாம்...' என்று அறிவுரைத்தார். அந்த துாண்டுதலில் கவிஞனானேன். தொடர்ந்து முயற்சி செய்து சிறுகதை, நாவல் படைத்து வருகிறேன்.என் வயது, 78; எழுத்தாளராக இருக்கிறேன். அகவை முதிர்ந்த தமிழறிஞருக்கான விருது கொடுத்துள்ளது தமிழக அரசு. மாத ஓய்வூதியமும், இலவசப் பேருந்து பயண அட்டையும் தந்து கவுரவித்துள்ளது. இந்த பெருமைகளுக்கு துாண்டுதலாக இருந்த ஆசிரியரை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.- கவிஞர் சிவதாசன், திருப்பூர்.தொடர்புக்கு: 90039 29699