பனி விழும் திகில் வனம்! (26)
முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்காவின் தந்தை துருவ். இமயமலையில் ஏறியபோது விபத்தில் இறந்ததாக அரசு கூறியதை ஏற்காமல் லக்பா என்ற பெண் துணையுடன் தந்தையை மீட்க சென்ற போது, தவறி பனிக்குகையில் விழுந்தாள் மிஷ்கா. அங்கு பனி மனுஷ சிறுமி சூச்சூ துணையுடன் தந்தையை தேடி பனிச்சிறுத்தையில் பயணம் செய்தாள் மிஷ்கா. பின், அருகே பனிமனிஷங்கள் வாழும் மற்றொரு பகுதிக்கு சென்றனர். இனி -பனி மனுஷ தலைவர்களுடன், மிஷ்காவும், சூச்சூவும் ஒரு குகைக்குள் பிரவேசித்தனர்.'குட்டிப் பெண்ணே... இங்கே ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது...'பனி மனுஷ தலைவர் கூறினார்.பார்வையை நீளமாக ஓட்டினாள் மிஷ்கா.பத்து உருவங்கள் கிடந்தப்பட்டிருந்தன.'ஒவ்வொன்றாய் பார் மிஷ்கா...'முதல் உருவத்துக்கு, 52 வயதிருக்கும். பருத்த உடல், உதடு பிதுக்கியபடி அடுத்த உருவம் நோக்கி நகர்ந்தாள். இரண்டாவது உருவத்துக்கு, 40 வயதிருக்கும். ஒவ்வொரு உருவத்தையும், மிஷ்கா பார்க்கப் போகும் போது துள்ளி குதித்தாள் சூச்சூ.'இவரான்னு பாரு... இவரான்னு பாரு...'எட்டு உருவங்களை பார்த்து சலித்த மிஷ்கா, ஒன்பதாவது உருவத்தை பார்த்ததும், வானத்துக்கு துள்ளி குதித்தாள்.கண்களை மூடி கைகளை மார்பில் இணைத்தபடி, இரு கால்களை ஒன்று சேர்ந்தபடி படுத்திருந்தது அவளது தந்தை துருவ்.''யப்பா... யப்பா... யப்பா... பார்த்திட்டேன்ப்பா... உன்னை பார்த்திட்டேன்ப்பா... ஐ லவ் யூ அப்பா...'' மிளற்றியபடி தந்தை உடல் முழுக்க தடவி பார்த்தாள்.''இறந்திட்டியாப்பா... உன்னை நம்பி இருக்கும் போது, நீ எப்படி இறக்கலாம். இவ்வளவு துாரம் தேடி வந்து, பிணமாகவா பார்க்கணும். என் நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாகிப் போச்சே! கனவுகள் எல்லாம் கருகிப் போச்சே...''இரண்டாவது பகுதி பனி மனுஷங்களின் தலைவர் மிஷ்காவின் பக்கத்தில் வந்தார்.'குளிர் நிலை துாக்கம் என்றால் என்னவென்று உனக்கு தெரியுமா...'''தெரியாது...'''குளிர் நிலை துாக்கத்தில் ஒரு மனிதரை ஆழ்த்தி வளர் சிதை மாற்ற நடவடிக்கைகளை குறைக்கலாம். உடலில் வெப்பம் அறவே நிறுத்தப்பட்டதால் உடல் நடவடிக்கைகள் இருக்காது. இந்த குளிர் நிலை துாக்கத்தில் ஆழ்த்தப்பட்டோர் ஏறக்குறைய பிணம் மாதிரி கிடப்பர். உணவோ, நீரோ உட்கொள்ள மாட்டர்... 'இவ்வகை குளிர் நிலை துாக்கம், நரிமுகமுள்ள குரங்கு, கரடி, வவ்வால், நத்தை, தவளை, மண்புழு, பெரிய வண்டு, ஒரு வகை பல்லி, ஆமை, முள்ளம்பன்றி போன்ற மிருகங்களிடம் காணப்படுகிறது...' ''என்ன சொல்ல வருகிறீர். என் அப்பா குளிர் நிலை துாக்கத்தில் இருக்கிறாரா...'''ஆமாம்...'''கடவுளே... என் வயிற்றில் பாலை வார்த்தாய்... என் அப்பாவின் குளிர்நிலை துாக்கத்துக்கு காரணமான அனைவருக்கும் என் இதயப்பூர்வ நன்றி...'''உன் அப்பாவை எழுப்பட்டுமா...'''இதென்ன கேள்வி... எழுப்புங்க...''ஒரு குப்பியில் நீலநிற திரவம் வைத்திருந்தார் பனி மனுஷ தலைவர்.அதிலிருந்து, 12 சொட்டுகளை, துருவ் நாசிக்குள் மெதுவாக சொட்டினார்.சில நொடிகளில் துருவ் உடல் துாக்கி வாரிப்போட்டது.இருமியபடி மெதுவாக கண் விழித்தான்.'எழுந்து உக்காருங்கள்...' அதன்படி அமர்ந்தவனுக்கு குடிக்க சடை எருமை பாலை கொடுத்தனர். வாங்கி குடித்தான். பாதி பாலை குடித்துக் கொண்டிருந்த போதே மிஷ்காவை பார்த்து விட்டான்.''மிஷ்கா... நீ எப்படி இங்கே...'' அலறினான்.பாய்ந்து தந்தையை அணைத்து முத்தமழை பொழிந்தாள்.''நான் எப்படி இங்கே வந்தேன்...''கேட்டான் துருவ்.'நாங்க தான் இங்கு கொண்டு வந்து குளிர் நிலை துாக்கப்படுத்தினோம்...' இரண்டாம் பனி மனுஷ தலைவர் எடுத்துக் கூறினார். ''நன்றி...'''தந்தை - மகள் பாசத்தை பார்த்ததும் நெகிழ்ந்து விட்டோம்...'ஓடிப்போய் சூச்சூ கைகளை பற்றினாள் மிஷ்கா.''சூச்சூ உதவி இல்லைன்னா, உங்களை மீட்டிருக்க முடியாதுப்பா...'' ''நன்றி செல்லம்மே...''நுாற்றுக்கணக்கான பனி மனுஷர்கள் ஆனந்த கும்மியடித்தனர்.''இனி உங்களுக்கு துளி பகைமை கூடாது. நர மாமிசம் சாப்பிடுவதை தவிருங்கள். உங்கள் மந்திர தந்திரத்தை, நாங்களும், எங்கள் விஞ்ஞான தொழில்நுட்பங்களை நீங்களும் பயன்படுத்தலாம். வரும் காலத்தில், உங்கள் அனுமதி இல்லாமல், நாங்கள் இமயமலை ஏறமாட்டோம்...'' என்றபடி அனைவருடனும் கை குலுக்கினான் துருவ்.'நன்றி...'''நானும், என் மகளும் இமயமலை உச்சிக்கு சென்று தேசியக் கொடியை நடுவோம். நண்பர் ஒருவரின் தந்தையின் அஸ்தியை பனிக்காற்றில் துாவுவோம்...'''மகிழ்ச்சி...'அனைவருடனும் குறிப்பாக, சூச்சூவுடனும் பிரியாவிடை பெற்று, தந்தையும், மகளும் இமயமலையில் ஏற ஆரம்பித்தனர்.லக்பா, 27,000 அடி உயரத்தில் வந்து இணைந்தாள்.''தஷி தலக் லக்பா சகோதரி...''எவரெஸ்ட் உச்சியில், துருவ், லக்பா, மிஷ்காவும் தேசியக்கொடி நட்டனர். மூவரும் சுயமி எடுத்தனர்.கொண்டு வந்திருந்த அஸ்தியை துாவினான் துருவ்.'வெள்ளிப் பனி மலை மீது உலாவுவோம். அடி மேலை கடல் முழுவதும் கப்பல் விடுவோம்... 'பள்ளித்தலம் அனைத்தும் கோவில் செய்வோம். எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்...'சேர்ந்து பாடினர்.அங்கேயே பல மணி நேரங்கள் இருந்து, பாராகிளைடில், 45 நிமிடங்களில் முகாமுக்கு வந்தனர். விமர்சித்தோர் வெட்கி தலைகுனிந்தனர்.டென்சிங் நார்கே தேசிய சாகச விருது 2024, துருவ்வுக்கு வழங்கப்பட்டது. கை தட்டி ஆர்ப்பரித்தாள் மிஷ்கா. கைத்தட்டல் ஓசை, பூமி உருண்டையை சுற்றி சுற்றி வந்தது.- முற்றும்.- மீயாழ் சிற்பிகா