உள்ளூர் செய்திகள்

ரோஜா வளையக் கிளி!

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், 2014, ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்படாத ஆந்திராவின் மாநில பறவையாக, பனங்காடை இருந்தது. புதிதாக தெலுங்கு தேசம் மாநிலம் பிரிக்கப்பட்ட பின், ஆந்திரப் பிரதேசத்திற்கு தனி பறவை அவசியம் தேவை என, மாநில அரசு கருதியது. இதன் படி, ஆந்திர பிரதேசத்தின் மாநில பறவையாக, 2018, ஜூன், 1ம் தேதி, 'ரோஜா வளையக் கிளி' அறிவிக்கப்பட்டது. இதன் அறிவியல் பெயர், 'சிட்டாகுலா கிரேமேரி' என்பதாகும். இது செந்தாரப் பைங்கிளி, பச்சைக்கிளி, சிவப்பு ஆரக்கிளி, மோதிர கழுத்துக் கிளி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் ரோஜா வளையக் கிளியை, சிலுகா மற்றும் ராம சிலுகா என அழைக்கின்றனர். இக்கிளி சராசரியாக, 41 செ.மீ., நீளமும், 128 கிராம் எடையும் உடையது. இக்கிளிகள் மணிக்கு, 15 கி.மீ., வேகத்தில் பறக்கும். பெண் கிளி, 3 - 4 முட்டைகளை இடும். அவற்றை, 20 முதல் 24 நாட்கள் வரை அடைகாக்கும். அதன்பின், குஞ்சுகள் பொரிகின்றன. இவ்வகை கிளிகள் 25 - 30 ஆண்டுகள் வரை உயிர்வாழும். பொதுவாக பழம், மொட்டு, காய்கறி, கொட்டை ஆகியவற்றை உண்கின்றன. இந்த கிளிகள், மனிதர்களின் பேச்சைப் பிரதிபலிக்கும் திறன் உடையவை. சொற்களை திரும்பத் திரும்ப கற்றுக்கொடுப்பதன் மூலம், அவற்றை கற்று, பேசும் திறன் உடையவை. இக்கிளி, 250 வார்த்தைகள் வரை கற்கும் திறனுடையது. தெலுங்கு கலாசாரத்தில் கிளிகளுக்கு முக்கிய இடம் உண்டு. கிளி ஜோதிடம் இங்கு மிகவும் பிரபலமானது. சிறந்த தம்பதியரை, ஜோடிக்கிளிகளுடன் ஒப்பிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !