உள்ளூர் செய்திகள்

பரிகாசம்!

பொறையூர் பள்ளியில் புதிதாக சேர்ந்திருந்தாள் யாழினி. எண்ணெய் தேய்த்து வாரி விடப்பட்ட கேசம், கறுப்பு நிறம், புன்னகை தவழும் முகம். முதல்நாள் வகுப்பில், ''பக்கத்து கிராமத்தை சேர்ந்தவள் நான்; நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்காகவே இந்த பள்ளியில் சேர்ந்துள்ளேன்...'' என அறிமுகம் செய்து கொண்டாள். யாழினியின் நிறம், தோற்றம் குறித்து கிண்டல் செய்தனர் மாணவர்கள். முதன்மை மதிப்பெண் பெறும் முகுந்தன் அதில் முன்னிலை வகித்தான். நன்கு படிப்பவன் முகுந்தன். ஆனால் அநாகரிகமாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தான். அறியாமையில் உழன்றான். யாழினியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாள் அமுதா. மாணவர்கள் கிண்டல் செய்யும் போதெல்லாம் கனிவுடன் ஆறுதல் கூறிவந்தாள். அன்று மிகவும் ஆவேசத்துடன், ''என்னை கேலி செய்வோர் வெட்கப்படும் படி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை நோக்கமாக வைத்து படித்து வருகிறேன். எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. ஆங்கில மொழி பாடத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. மற்ற பாடங்களில், கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று விடுவேன்...'' என்றாள் யாழினி. ''எனக்கு ஆங்கில மொழி நன்கு வரும்; கணக்கில் தான் கஷ்டப்படுகிறேன். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை என நம்புகிறேன்...'' யாழினியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினாள் அமுதா. மாலை வேளையில் இருவரும் கணக்கு, ஆங்கில பாடங்களில் சந்தேகங்களை பகிர்ந்து சேர்ந்தே படித்தனர். விவாதித்து தீர்வுகள் கண்டனர். காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்தது. மாணவ, மாணவியர் பெற்றிருந்த மதிப்பெண்களை அன்றைய வகுப்பில் வாசிக்க தயாரானார் வகுப்பாசிரியர். ''இந்தமுறை சிறிது சறுக்கி மூன்றாம் இடம் பெற்றுள்ளான் முகுந்தன்...''அதிர்ச்சியுடன் பார்த்த முகுந்தனிடம், ''நன்றாக படித்தால் மட்டும் போதாது. நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்; உருவத்தைப் பார்த்து, மட்டம் தட்டுவதை நிறுத்திக் கொள்...'' என்றார் வகுப்பாசிரியர். ஆசிரியர் வைத்த மதிப்பீட்டால் தலை குனிந்து நின்றான் முகுந்தன். தொடர்ந்து, ''சம மதிப்பெண்களுடன் வகுப்பில் இருவர் முதலிடம் பெற்றுள்ளனர்; அவர்கள் யார். கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...'' என்று சொல்லியபடி புன்னகைத்தார் ஆசிரியர். வியப்பு மேலிட அமைதி காத்தனர் மாணவர்கள். யாரும் பதில் சொல்லவில்லை. ''கடினமாக உழைத்து முதலிடத்தை பிடித்தது மாணவியர் யாழினி மற்றும் அமுதா...'' பெரும் கரகோஷம் எழுப்பி பாராட்டினர் மாணவர்கள். பட்டூஸ்... உருவத்தை பார்த்து வெறுப்பு காட்டாமல், உள்ளத்தை பார்த்து அன்பு செலுத்துங்கள்! - சுபாவாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !