உள்ளூர் செய்திகள்

உபசரிப்பும், உச்சரிப்பும்!

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 1967ல், 5ம் வகுப்பு படித்தேன்.வகுப்பு ஆசிரியை பரிமளா துடிப்புடன் பாடம் நடத்துவார். சுறுசுறுப்புடன் காணப்படுவார். சென்னை, தம்புச்செட்டி தெருவில் மாணவர் மன்றம் நடத்திய பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள, என் பெயரை பரிந்துரைத்தார். அதற்கு உரிய பயிற்சி பெற, விடுமுறை நாட்களில் அவரது வீட்டுக்கு செல்வேன். அப்போது டீ, பிஸ்கட் தந்து உபசரிப்பார். ஏற்ற இறக்கத்துடன் மேடையில் பேசுவதற்கு தக்க பயிற்சி தந்தார். அதை பின்பற்றி, போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அதற்காக, 51 காசு பண முடிப்பும், வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன.எனக்கு, 69 வயதாகிறது. தடய அறிவியல் துறையில், 30 ஆண்டுகள் பணியாற்றி, லேப் டெக்னீஷியனாக ஓய்வு பெற்றேன். இப்போதும், தமிழ் மொழியை ஏற்ற இறக்கத்துடன் படிக்கிறேன்; பேசுகிறேன். மாணவர்களுக்கான பேச்சு போட்டி பற்றி பத்திரிகைகளில் படிக்கும் போதெல்லாம், வகுப்பாசிரியை பரிமளாவின் அன்பு முகம் மனதில் படர்ந்து நெகிழ்வை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் பணிவையும், நன்றியையும் சமர்ப்பிக்கிறேன். - சு.தேவராசுலு, சென்னை. தொடர்புக்கு: 94457 19704


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !