உழைப்பே உயர்வு!
காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2011ல் தலைமையாசிரியராக பணி ஏற்றேன். மாணவர்களுக்கு மிகச் சிறந்த கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்டிருந்தேன்.அதை நிறைவேற்றும் வகையில் பள்ளி உள் முகப்பு சுவற்றில், 'நல்லாசிரியருடன் நல்ல மாணவர்கள் சேர்ந்தால், நல்ல தேசம் உருவாகும்' என்ற பொன்மொழியை, நீலநிற பின்புலத்தில் வெள்ளை வண்ணத்தில், 'பளிச்' என எழுதியிருந்தேன்.மறு ஆண்டு மேல்நிலை வகுப்புக்கு உயிரியல் பாடம் நடத்திய ஆசிரியர், திடீரென மாறுதலாகி விட்டார். மாற்று ஆசிரியரை கல்வித்துறை நியமிக்கவில்லை. இதனால், கற்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டது.இதை தீர்க்க களத்தில் இறங்கினேன். முன் தயாரிப்பு செய்து உயிரியல் பாடத்தை கவனமுடன் நடத்தினேன். எளிதாக மனங்கொள்ளும் உத்திகளை கற்பித்தேன். எளிய தேர்வுகள் நடத்தி பயற்சி கொடுத்தேன். செய்முறையாகவும் நடத்தினேன். நல்வாழ்த்து கூறி அரசு தேர்விற்கு அனுப்பி வைத்தேன்.என் கடும் உழைப்பு வீணாகவில்லை. பொதுத் தேர்வில் உயிரியல் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதை பாராட்டி சான்றிதழ் வழங்கியது கல்வித்துறை. வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.எனக்கு, 69 வயது ஆகிறது. கல்வித்துறையில் காஞ்சிபுரம் எஸ்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். உழைப்புக்கு தனி மரியாதை இருப்பதை நிரூபித்த அந்த நிகழ்வை பெருமிதத்துடன் நினைவில் கொண்டுள்ளேன்.- எஸ்.அன்பரசு, சென்னை.தொடர்புக்கு: 99622 65915