யமுனை தோழி!
ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி! பகவான் கிருஷ்ணர் போல் வேஷமிட்டு, குழந்தைகளை ஊர்வலமாய் அழைத்து வரும் போது, காண்பதற்கு கோடி கண்கள் வேண்டும். கிருஷ்ணருடன் மிகவும் தொடர்புடையது யமுனை நதி. கிருஷ்ணர் பிறந்ததும், தாய்மாமன் கம்சனிடம் இருந்து அவரைக் காப்பாற்ற ஏற்பாடு செய்தார் தந்தை வசுதேவர். யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில் வசித்து வந்த நண்பர் நந்தகோபன் மனைவி யசோதையிடம், கிருஷ்ணரை ஒப்படைக்கச் சென்றார். அப்போது, யமுனையைக் கடக்க வேண்டிய நிலை வந்தது. நிலைமையை அறிந்ததும் அந்த நதி, இரண்டாகப் பிரிந்து வழி விட்டது. வசுதேவர் நடந்து சென்று கிருஷ்ணரை காப்பாற்றினார். கோபிகைகளையும் இந்த நதி காப்பாற்றியது.ஒருமுறை, கோகுலத்தில் வசித்த பெண்கள், யமுனை நதியைக் கடந்து பால் பொருட்கள் விற்கச் சென்றனர். அனைவர் தலையிலும் பானைகள் அடுக்காக இருந்தன. காலையில் ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருந்தது. எனவே, எளிதாகக் கடந்து சென்றனர் பெண்கள். மாலையில் திரும்பிய போது நீரோட்டம் அதிகரித்திருந்தது. ஆற்றை கடந்து எப்படி திரும்புவதென தயங்கி நின்றனர்.ஆற்றங்கரையில் தியானத்தில் இருந்தார் வியாச முனிவர். அவரை சந்தித்து, 'சுவாமி... நாங்கள் கோகுலம் செல்ல வேண்டும். நதியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது. வீட்டில் குழந்தைகள் எல்லாம் எங்களுக்காக காத்திருப்பர். மறுகரைக்கு செல்ல நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டனர் பெண்கள்.உடனே வியாசர், 'எனக்கு பசிக்கிறது. உங்களிடம் தயிர், பால், வெண்ணெய் மிச்சமிருந்தால் கொடுங்கள்...' என்றார். கொடுத்தவற்றை திருப்தியாக சாப்பிட்டார் வியாசர்.பின், யமுனை நதிக்கரைக்கு வந்து, 'நான் விரதம் இருந்தது உண்மையானால், இந்த பெண்களுக்கு வழி விடு...' என்றார். யமுனை இரண்டாய் பிரிந்து வழி விட்டது. வியாசர் முன்னே செல்ல, கோபிகையர் பின்னால் நடந்தனர். மறுகரையை அடைந்ததும், 'சுவாமி... நாங்கள் தந்த உணவு பொருட்களை சாப்பிட்டீர். பின், யமுனையிடம் விரதம் இருந்ததாக சொன்னீர். யமுனையும் வழி விட்டது. இது, முன்னுக்கு பின் முரணாக உள்ளதே... யமுனை உங்கள் தவசக்திக்கு பயந்து விட்டதோ...' என கேட்டனர்.'இல்லை... நான் விரதம் இருந்தது உண்மை. சாப்பிட்ட போது, 'எனக்குள் இருக்கும் கிருஷ்ணன் இதை உண்ணட்டும்' என்று மனதில் வேண்டிக் கொண்டேன். வெளி பார்வைக்கு, உணவை நான் சாப்பிட்டது போல் தோன்றும். ஆனால், எனக்குள் இருக்கும் கிருஷ்ணனே, அந்த உணவை சாப்பிட்டான். எனவே, நான் விரதம் இருப்பது முற்றிலும் உண்மை. அதை அறிந்திருப்பதால் தான், யமுனை வழி விட்டது...' என்றார் வியாசர். யமுனை நதியின் சக்தி அத்தகையது. இது, இமயமலையில் யமுனோத்ரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது. உத்ராஞ்சல் மாநிலத்தில் பிறந்து, டில்லி, ஹரியானா வழியாக பாய்ந்து, உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் கங்கை நதியில் கலக்கிறது. இதன் நீளம், 1,376 கி.மீ., வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் போது, மறக்காமல் யமுனை நதியை பார்த்து வாருங்கள்.- தி.செல்லப்பா