முகம் பார்த்து... முகம் பார்த்து...
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2018ல், 10ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியையாக இருந்த ஜெயா, மிகவும் அன்பானவர்; அறிவியல் பாடம் நடத்துவார்.தாய் போல் பழகுவார். மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகளை முகம் பார்த்தே அறிந்து கொள்வார். தனியாக அழைத்து கனிவாக தேற்றுவார்.அவருக்கு இரு மகள்கள்; விடுதியில் தங்கி, கல்லுாரியில் படித்து வந்தனர். விடுமுறையில் வந்திருந்தவர்களிடம் எங்களை அழைத்து சென்று, 'பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்...' என அறிமுகப்படுத்தினார்.அதன்படி, புரியாத வினாக்கள் மற்றும் ஆங்கில இலக்கணத்தில் தெளிவு பெற்றோம். தயக்கத்தை தவிர்க்க, அவர்கள் வழங்கிய ஆலோசனை பெரிதும் உதவியது. அந்த வழிகாட்டுதலுடன் பொதுத்தேர்வில், 417 மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றேன்.தற்போது என் வயது, 20; பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல் படிக்கிறேன். என் கல்வியில் அந்த ஆசிரியையும், அவரது மகள்களும் எடுத்த அக்கறை மிகப் பெரிது. அதை, அன்பு கலந்த மரியாதையுடனும் நினைவில் பதித்துள்ளேன். நன்றியுடன் நாளும் வணங்குகிறேன்.- பரணி செல்வராஜ், திண்டுக்கல்.தொடர்புக்கு: 93445 54319