சீதாவின் ஆலமரம்!
அழகர்புரம் கிராமத்தில், ஆலமரம் ஒன்று, அகன்று விரிந்து வளர்ந்திருந்தது. அந்த கிராமத்தின் அடையாளமாக விளங்கியது. அங்கு வசித்தாள் சீதா; 6ம் வகுப்பு படிக்கும் சிறுமி. பள்ளி முடிந்ததும் ஆலமரத்தின் அடியில் தினமும் விளையாடி செல்வாள்.படிப்பில் சிறந்து விளங்கினாள்; சுற்றுச்சூழலை பேணிக் காக்க ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாள்.ஒருநாள் -பள்ளியில் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் நேரம்.ஆலமரத்தின் அடியில், அரசு அதிகாரிகள் கூடியிருந்தனர். எது பற்றியோ தீவிரமாக பேசி கொண்டிருந்தனர். அதைக் கண்ட சீதா, வீட்டுக்கு சென்றதும் தந்தையிடம் அதுபற்றி விசாரித்தார்.''விரைவில் ஆலமரத்தை அகற்றி, அந்த வழியாக சாலை அமைக்க போகின்றனர்...'' தந்தை கூறியது கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தாள் சீதா. மறுநாள் சோகமாக பள்ளிக்கு சென்றாள்.ஆலமரம் அருகே சென்ற போது, கண்ணீர் பெருக்கெடுத்தது. என்ன செய்வதென்று யோசித்தாள். பளிச்சென்று ஒரு யோசனை வந்தது.மறுநாள் -வழக்கமாக பள்ளிக்கு செல்லும் நேரத்திற்கு முன் புறப்பட்டு, ஆலமரத்தை அடைந்தாள் சீதா. சாலையை விரிவு படுத்த அளந்து கொண்டிருந்தனர் அதிகாரிகள்.தைரியத்துடன் உயர் அதிகாரியை சந்தித்து அறிமுகப்படுத்தியபடி, ''சாலை அகலப்படுத்தும் பணிக்காக, இந்த ஆலமரத்தை அகற்றுவதை பற்றி உங்களிடம் உரையாட விரும்புகிறேன்...'' என கூறினாள்.உயர் அதிகாரியும் அதற்கு இணங்கினார்.''ஐயா, இந்த ஆலமரம், ஊர் மக்களுக்கு நிழல் தந்து, பல தலைமுறை நினைவுகளைத் தாங்கி அழகு சேர்க்கிறது. சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக அமைந்து, மாசற்ற காற்றை தருகிறது. இது, இயற்கையின் மூலதனம்; இதன் சிறப்பை அறியுங்கள்... ஆலமரத்தை வெட்டுவதா, வேண்டாமா... என்பதை பின்னர் தீர்மானியுங்கள்...'' என கூறினாள் சீதா.அதுகேட்டு நிதானித்தார் அதிகாரி.ஆலமரத்தின் அடியில் இதமாக காற்று வீசியது. அதில், பறவைகள் கூடுகட்டி வாழ்ந்தன. பாதசாரிகள் இளைப்பாறினர். மாலை நேரத்தில், ஆலமரத்தின் அடியில் சந்தோஷமாக விளையாடினர் சிறுவர்கள். அதைக் கண்ட அதிகாரி மனதில் மாற்றம் ஏற்பட்டது.பள்ளி விட்டு திரும்பினாள் சீதா. அவளைக் கண்டதும், ''நீ கூறியது போல், இந்த ஆலமரம் சுற்றுச்சூழலின் நண்பன் மட்டுமின்றி, கிராமவாசிகளின் வாழ்வுடன் ஒன்றியிருப்பதை உணர்ந்தேன்... எனவே, ஆலமரத்தை அகற்ற வேண்டாம் என உத்தர விட உள்ளேன்...'' என்றார் அதிகாரி.சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உள்ள ஆர்வத்தை வெகுவாக பாராட்டினார்.மிகவும் மகிழ்ந்தாள் சீதா.நன்றாக படித்து, அதே கிராமத்தில் நிர்வாக அலுவலகராக பணியில் சேர்ந்தாள்.சீதாவின் தைரியத்தாலும், சுற்றுச்சூழல் பற்றாலும், நிலைத்து நிற்கிறது ஆலமரம்.குட்டீஸ்... சுற்றுச்சூழலை பேணி காப்பது கடமை; மரம் வளர்த்து சூழலை பேணி மழை பெறுவோம்.எஸ்.பவித்ரா