உள்ளூர் செய்திகள்

சிலேட்டில் ஆரம்பித்து... சிறுவர்மலர் வரை...

நான் ஈரோடு மாவட்டம், உக்கரம் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்.ஒருநாள், வகுப்பில் கைத்தொழில் ஆசிரியர் சடையப்பன் பாடம் நடத்தினார். அப்போது நான் மட்டும் பாடத்தைக் கவனிக்காமல், சிலேட்டில் படம் வரைந்தேன். அதை ஆசிரியர் கவனித்து விட்டார். என் அருகில் வந்து, சிலேட்டை வாங்கி பார்த்து விட்டு என்னை எதுவும் திட்டாமல், அடிக்காமல், அருகில் தடுப்புச் சுவர் இல்லாத அறையில் தலைமையாசிரியர் துளசிதாஸ் உட்கார்ந்திருப்பதை பார்த்து, 'அவரை வரைந்து காட்டு' என்றார். தலைமையாசிரியர் நாற்காலியில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் காட்சியை அப்படியே சிலேட்டில் ஓவியமாக வரைந்தேன். சிலேட்டை வாங்கிப் பார்த்த கைத்தொழில் ஆசிரியர் என்னைப் பாராட்டி, என் சிலேட்டை பார்க்கச் சொல்லி மாணவர்களிடம் கொடுத்தார். ஒவ்வொரு மாணவர்களும் வரிசையாக பார்த்தனர்.பின் எல்லா மாணவர்களிடமும் ஒவ்வொரு சிலேட் பென்சிலை எனக்கு பரிசாக கொடுக்கச் சொல்லிவிட்டு, அவரும் ஒரு சாக்பீஸை எனக்கு பரிசாக கொடுத்தார். அப்போதெல்லாம், சிலேட் பென்சில் வாங்குவதே பெரிய விஷயம். அப்படியிருக்கும் போது என்னுடைய பாக்ஸ் முழுவதும் பென்சிலால் நிறைந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது. அதுவே, ஓவியத்திற்காக நான் வாங்கிய முதல் பரிசு. அன்று அவர் ஆரம்பித்து வைத்த அந்த ஊக்கம் தான் நான் இப்போது, 'சிறுவர் மலர்' இதழில் ஓவியம் வரையுமளவிற்கு ஒரு ஓவியனாக என்னை வளர்த்துள்ளது. இதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.- சு.ரவி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !