அடி தந்த பரிசு!
கோவை மாவட்டம், தேவாங்க உயர்நிலைப் பள்ளியில், 1972ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தேன். காலாண்டு தேர்வுக்கு முன் நடைபெற்ற முதல் இடைப் பருவத் தேர்வில், விருப்ப பாடமான பொருளியலில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தேன். அதே வகுப்பில் பலரும் குறைந்த மதிப்பெண் தான் பெற்றிருந்தனர். மாணவர்களின் வளர்ச்சியில், மிகுந்த அக்கறை காட்டிவந்தார் தலைமை ஆசிரியர். அந்த விடைத்தாள்களுடன் வகுப்பறைக்கு வந்தார். அப்போது, கணித வகுப்பு நடந்து கொண்டிருந்தது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் பெயர்களை வாசித்தார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த நானும் எழுந்து நின்றேன். என்னை கண்டதும், 'இவன் நல்லா படிக்கிறவனாச்சே... இவனும் குறைந்த மதிப்பெண் வாங்கி இருக்கிறான் பாருங்க...' என்றபடி, 'பளார்' என கன்னத்தில் அறைந்தார்; திகைத்து நின்றேன். கணித ஆசிரியருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சமாதானப்படுத்தும் விதமாக, 'சரிடா... நீ நல்லா படிக்கிறவன்; அதனால் தான், அவருக்கு கோபம் வந்து விட்டது...' என சமாளித்தார்.அந்த அடியின் விளைவாக பொதுத் தேர்வில், பொருளியலில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றேன்.தற்போது, என் வயது, 65; வாழ்வில் உயர்வதற்கு ஒரு அடி எனக்கு உதவியது. அதைத் தந்த தலைமை ஆசிரியரை, போற்றி வணங்குகிறேன்!- கே.ஆறுமுகம், கோவை.