உள்ளூர் செய்திகள்

சூரிய குளியல்!

இயற்கை வழங்கும் அற்புதங்களில் சூரிய சக்தியும் ஒன்று. இதற்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனால் தான், சூரிய நமஸ்காரம் என்ற வணக்க முறை யோகக்கலை பயிற்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சூரிய ஒளியில் உள்ள, ஏழு நிறங்களும், உடலுக்கு தேவையான ஆற்றலை தருகின்றன. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளில், சூரிய சிகிச்சை ஓர் அங்கமாக இருக்கிறது. இது பற்றி தெரிந்து கொள்வோம்...சூரிய ஒளியில், வைட்டமின் - டி உள்ளிட்ட உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதே சூரிய சிகிச்சை முறையாகும்.உடல் ஆரோக்கியத்துடன், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூத சக்திகளுக்கு தொடர்பு உண்டு. இன்றைய வாழ்க்கை முறை பஞ்ச பூதங்களிலிருந்து விலகி விட்டது. சூரியஒளி பட்டாலே ஆபத்து, உடல் கறுத்து விடும் என எண்ணும் நிலை உள்ளது. உடலில், 'சன்ஸ்க்ரீன் லோஷன்' தேய்த்து கொள்வது, உடல் முழுக்க மூடிக்கொள்வது, முழு நேரமும் குளிர்சாதன அறையிலேயே இருப்பது என, முரண்படும் வாழ்வு முறையை பின்பற்றுகிறோம். விதம் விதமான நோய்களுக்கு இந்த வாழ்க்கை முறை தான் காரணம்.சூரிய ஒளி படாமல் விலகி வாழ்வதால், வைட்டமின் - டி குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் விரும்பத்தகாத பிரச்னைகள் வருகின்றன. இது தவிர, 'ஆஸ்டியோ போரோசிஸ்' மற்றும் 'ஆஸ்டியோ மலேசியா' என்ற நோய்களும் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. அடிக்கடி எலும்புகள் முறிந்து போவது, மூட்டு வலி, சிறிய பாரங்களை கூட துாக்க முடியாத நிலை போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது. இது போன்ற பாதிப்புகளை சரி செய்ய சூரிய சிகிச்சை முறை நல்ல தீர்வாக உள்ளது. இதற்காக கடற்கரைக்கோ, தனிப்பட்ட இடத்துக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டின் அருகே எங்கு சூரிய ஒளி விழுகிறதோ, அங்கே எடுத்துக் கொள்ளலாம். காலை, 9:00 மணிக்குள் அல்லது மாலை 5:00 மணிக்குப் பின், சூரியஒளி விழும் இடத்தில் நின்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். உச்சி வேளையிலோ, உஷ்ணம் அதிகமான நேரத்திலோ இந்த சிகிச்சை எடுக்க முயற்சிக்க வேண்டாம். முயன்றால், 'சன்ஸ்ட்ரோக்' உள்ளிட்ட ஆபத்துகளில் சிக்க வாய்ப்பு உண்டு. சரும நோய்கள், ஒவ்வாமை பாதிப்பு உடையவர்கள் உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, சூரிய குளியல் எடுக்கலாம்.இப்படி குளியல் எடுக்கும் முன், இரண்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும்; சூரிய ஒளி, 30 முதல், 45 டிகிரி கோணத்தில் விழும் இடத்தில் குளியல் எடுக்க வேண்டும். வாழை இலையை உடலில் போர்த்தி, சூரியக் குளியல் சிகிச்சை முறையும் இருக்கிறது. தலையில், ஈரத்துணியைக் கட்டி எடுப்பதும் நல்லது. இது உஷ்ண பாதிப்பை நீக்கும்.க்ரோமோதெரபி என்ற நிறமிச் சிகிச்சை முறையும் சூரிய ஒளியை அடிப்படையாக கொண்டது தான். சரும நிறமி வேறுபாடு உடையவர்களுக்கு, சூரியக் கதிர்கள் அலர்ஜியை உண்டாக்கலாம். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுப்பது நல்லது.கவனத்தில் கொள்ள வேண்டியவை...* சூரிய சிகிச்சையை, 15 முதல், 20 நிமிடங்கள் எடுக்கலாம்* குழந்தை முதல், பெரியோர் வரை எடுக்கலாம்* சூரிய குளியல் முடிந்து வியர்வை அடங்கியபின் நீரில் குளிக்கலாம்* சூரிய சிகிச்சைக்குப் பின் நீர் அருந்தலாம்; ஆனால், ஐஸ் சேர்த்த பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !