நாளை வருவான் நாயகன்! (4)
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்ததை விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அடுத்தவாரம் தாயாரை அழைத்து செல்ல வரவிருப்பது பற்றி தகவல் கூறினார். இனி - மறுநாள் செவ்வாய் கிழமை -லட்சுமி தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிதுரை, மனைவி சங்கீதாவுடன் ஊர் திரும்பினார். ஆனந்த அழுகையுடன் அவர்களிடம் விபரம் கூறினார் லட்சுமி.''உலகத்துல கடவுள் இருக்காரு என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கு...''நெகிழ்வுடன் லட்சுமியை கட்டியணைத்தார் சங்கீதா. இருகரம் கூப்பி, கிழக்கு வானத்தை வணங்கியபடி, ''அவன் அப்பா முத்து மாணிக்கம் இருந்த காலத்திலேயே இந்த நல்ல செய்தி கிடைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்... சரி எப்படியோ... கவலை எல்லாம் தொலையட்டும்; நிம்மதியா இருங்க... சாயங்காலம் கோவிலுக்கு போயிட்டு வாங்கம்மா...'' என்றார் ஆசிரியர் பழனிதுரை''நேத்தே போயிட்டு வந்துட்டேன் ஐயா...''''என்னம்மா முடிவு செய்துருக்கீங்க... உடனே மும்பைக்கு போக போறீங்களா... இல்ல இன்னும் கொஞ்ச நாளுக்குப் பின் போகலாம்ன்னு நெனைக்கிறீங்களா...''''கூடவே கூட்டிக்கிட்டு போயிடறேன்னு சொல்லியிருக்கானே ஐயா...''''உங்க மனசு என்ன சொல்லுதோ அப்படியே செய்யுங்க...''''புள்ளகூட போயிடலாம்ன்னு ஆசையா இருக்கு...''''தாராளமா செய்யுங்கம்மா... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்! நம்ம ஊர் தபால்நிலையத்துல உங்க பேர்ல சேமிச்சு வெச்சுருக்க பணத்தை அந்த ஊர் போஸ்ட் ஆபீசுக்கு மாத்த என்னென்ன செய்யணும்ன்னு விசாரிச்சாகணும்...''''சீக்கிரமா செய்யுங்கய்யா...''- ''ஆனால், இந்த வாரம் முழுக்க கல்லுாரி அட்மிஷன் விஷயமா அதிக அலைச்சல் இருக்கு! நேரமே இல்லை...''''சரிங்கய்யா...''''உங்க டிபாசிட் பத்திரத்தையும், பாஸ் புக்கையும், இப்பவே ஒப்படைச்சிடறேன். அதை ஜாக்கிரதையா கொண்டு போய், நீங்களே விசாரிச்சுடுறீங்களா...''''எனக்கு விபரம் தெரியாதுங்களே... நீங்க வந்தீங்கன்னா எழுதிக்கொடுத்து மொத்த பணத்தையும் வாங்கிட்டு வந்துடலாம்...''''மொத்த பணம், 5 லட்சத்தையுமே உடனே எடுத்துட போறீங்களாம்மா...''''என்னைக்கு இருந்தாலும், அவன் கிட்ட கொடுக்க வேண்டிய பணம் தானுங்களே...''''ஆற அமர யோசிச்சு முடிவு பண்ணுங்க...''''ஏங்க ஐயா, திடீர்ன்னு இப்படி பேசுறீங்க... நீங்க தானே எது நல்லது, எது கெட்டதுன்னு எனக்கு புத்திமதி சொல்லிக்கிட்டு வர்றீங்க... நானும் உங்க வார்த்தைப்படி தானே நடந்துக்கிட்டு வர்றேன்...''''வாஸ்தவம்தான்மா... இப்ப சூழ்நிலை மாறியிருக்கு, இனி எல்லாத்தையும் உங்களோட பையனையும் வெச்சு தான் யோசிச்சு பார்க்கணும்...''''புரியலீங்க...''''அம்மா... உங்களுக்கு இதுவரைக்கும் என்ன நடந்துச்சு... இப்ப என்ன நடந்துக்கிட்டிருக்கு... இனிமே வர்ற நாட்கள்ள நீங்க, மன நிம்மதியோட இருக்கணும்ன்னா என்ன நடக்கணும்; என்னென்ன நடக்க கூடாது; உங்க பலம் எது... பலவீனம் எது... இப்படி எல்லாத்தையும் சிந்திச்சிப்பாருங்க...''பழனிதுரையின் வார்த்தைகள் லட்சுமிக்கு புதிதாக இருந்தன!நீண்ட உரையாடலின் முடிவாக, ''நீண்ட காலத்துக்கான முடிவுல, எப்பவும் நிதானம் வேணும்... அவசரப்பட்டா அவஸ்தை பட வேண்டி இருக்கும்... மகன் சூரியராஜா உங்களை தேடி வர்றது முக்கியமில்ல! குறைந்தபட்சம் ஒரு வாரமாவது உங்க கூடவே, இந்த வீட்டிலேயே தங்கி இருக்கணும். மனம் திறந்து பேசிக்கணும்! அப்படி பேசினாத்தான், அவன் மற்றும் அவனோட குடும்பத்தாரோட குணாதிசயங்களை எல்லாம் புரிஞ்சிக்க முடியும்...''''ஓ...''''அதுக்கு அப்புறம் தான், அவங்களோட எப்ப போகணும்... பணத்தை எப்படி பராமரிக்கணும் என்ற முடிவை எட்ட முடியும். தொடர்ந்து, 10 நாள் இங்க தங்குறதுக்கு அவங்களை ஒத்துக்க வைங்க முதல்ல! அதுக்குப் பின் எல்லாத்தையும் பாத்துக்கலாம்...''முடிவாகவும், விவரமாகவும் விளக்கினார் பழனிதுரை.முத்துமாணிக்கம், 30 வயதில், 23வயது லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தும் குறித்த காலத்தில் குழந்தை பிறக்கவில்லை.ஆரம்பத்தில் கவலை கொள்ளாமல் இருந்த தம்பதி, ஆண்டு செல்ல செல்ல பயத்திலும், வேதனையிலும் ஆழ்ந்து விட்டனர்.யார், என்ன வைத்திய முறைகள் கூறினாலும் பின்பற்றினர்.எந்த மத வழிபாட்டுத் ஸ்தலங்களுக்கும் போய் வணங்கி வந்தனர்.இப்படியே, 10 ஆண்டுகள் முடிந்தன. இந்த நிலையில் மகிழ்ச்சியான மகப்பேறு கிட்டியது.சூரியராஜா பிறந்தான். அவன் பிறப்பால், வாழ்வு பேரொளி பெற்று விட்டதாக கொண்டாடினர்; கொஞ்சி சீராட்டினர்!வாழ்க்கையின் வளம் முழுவதும் அவன் வழியாகவே வந்து சேரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் வாழ்வை மறுதுவக்கம் செய்தனர்!கால வெள்ளம், அந்த நம்பிக்கையை துவம்சம் செய்தது!- தொடரும்...- நெய்வேலி ராமன்ஜி