பொக்கிஷம் (34)
சென்றவாரம்: பெரியவர் மயனிடம் சின்னதம்பியும் மற்ற சிறுவர்களும் தங்கம் மற்றும் வைரத்தை எடுத்துக்கொள்ள மறுத்தனர். எனவே, அடுத்த கட்டத்திற்கு சிறுவர்களை அழைத்துச் சென்றார். இனி-''பொக்கிஷம். இது பொக்கிஷம் பாருங்கள். இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்றார் பெரியவர்.அந்த மாணிக்க மாளிகையே பச்சை நிறமாக இருந்ததால், அனைவரும் அந்த வண்ணத்திலேயே காணப்பட்டனர்.''அய்யா நான் பச்சை நிறத்துக்கு மாறிவிட்டேன்,'' என்றான் ஒரு சிறுவன்.அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்து அதிசயித்தனர். மாணிக்க கற்கள் குவியலாக கிடந்தன. இவர்கள் நடந்த பாதையில் எல்லாம் வானத்தில் இருந்து பொழிவது போல் மாணிக்க கற்கள் சிறு சிறு அழகிய வடிவில் அவர்கள் மேல் பொழிந்து அவர்களின் உடலை மறைத்து இப்போது கழுத்து வரை வந்து விட்டது. அவர்களும் சிரமப்பட்டு அதே சமயம் ஒரு மகிழ்வுடனும், உத்வேகத்துடனும் நடந்து சென்றனர்.சின்னதம்பியும், வாண்டுவும், செங்கதிர் செல்வனும், வருணும் மற்ற சிறுவர்களை வழி நடத்திச் சென்றனர்.அதே சமயம் தளபதியும், குணாளனும் காத்து நின்றனர்.''என்ன மானிடர்களே தங்கங்களை அள்ளி விட்டீர்களா? ஆசை அடங்கியதா இல்லை இன்னும் வேண்டுமா?'' என்று கேட்டார் மயன்.''இந்த நாட்டிற்கு இது போதாதுதான். ஆனால், நாழிகை இல்லை என்று கூறிவிட்டீர்களே அதான் வந்து விட்டோம்,'' என்றான் குணாளன்.''ஓ! அப்படியென்றால் அரைமனதுடன் தான் வந்திருக்கிறீர்கள். போகட்டும். உங்களுக்காக இப்போது பொக்கிஷ மலையின் அடுத்த கட்ட கதவுகள் திறக்கப்படும். அதை அனுபவியுங்கள்,'' என்று எக்காளத்துடன் சிரித்தபடி கூறவும், வைரக் கதவுகள் திறந்து கொண்டன. அதே சமயம், தங்க கதவுகள் மூடிக்கொண்டன.''ஆ வைரம் வைரம் எங்கு நோக்கினும் வைரக்கற்கள். இது வேண்டும். இது வேண்டும்,'' என்று துள்ளிக்குதித்தான் தளபதி.''வீரர்களே தாமதிக்காமல் சாக்கு பைகளில் அள்ளி போடுங்கள். தாமதம் வேண்டாம்!'' என்று கட்டளையிட்டான்.வீரர்கள் கண்களை பறிக்க அவர்கள் கண்களை திறக்கக்கூட முடியாமல் வெறும் கைகளால் வைரக்கற்களை அள்ளி போட்ட படி இருந்தனர். தளபதிக்கும், குணாளனுக்கும் ஏக உற்சாகம். ஒரு நாட்டின் மன்னருக்கு கிடைக்காத பொக்கிஷம் தங்களுக்கு கிடைத்ததாக பெருமிதம் அடைந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்.அவர்கள் கண்கள் கூசவே, கண்களை மூடியபடி பேசினர்.''ஆகா என்ன அற்புதம் குணாளா! வானத்தில் தோன்றும் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இப்போது தெரிகின்றனவே. என்ன அருமையான வைரக்கற்கள். ஆகா! நாம்தான் என்ன பாக்கியசாலிகள். ஆனால், இந்த நாட்டின் மன்னனோ பாதாள சிறையில், ஹா... ஹா...'' என்று எக்காளத்துடன் சிரித்தான் தளபதி. குணாளனும் சேர்ந்து சிரித்தான்.''எக்காளமிடும் மானிடர்களே இந்த கட்டடத்தின் நாழிகை முடியப்போகிறது. அடுத்த கட்டடம் வருகிறீர்களா? அல்லது இதுவே போதுமா?'' கேலிச் சிரிப்புடன் கேட்டார் மயன்.''போதாது! போதாது! இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும்,'' என்று தளபதியும், குணாளனும் உரக்க குரல் கொடுத்தனர்.''அப்படி என்றால் அடுத்த கட்டடம் வாருங்கள். கதவு மூடப் போகிறது,'' என்று எச்சரித்தார் மயன்.மூட்டை கட்டியவாறு அனைத்து வீரர்களும் வந்து சேர்ந்தனர். வைரக்கற்கள் கண்களை பறித்ததால் வீரர்களால் நடந்து வர முடியவில்லை. உடனே தளபதியும், குணாளனும் கண்களை மூடியபடி அவர்களிடம் சென்று அவர்களை கண்களை மூடிக் கொண்டே, நிதானமாக வழி கணக்கிட்டு அழைத்து வந்தனர்.''பொக்கிஷத்தின் காவலர் மயன் அவர்களே! ஒரு வேண்டுகோள். இப்போது எங்கள் வீரர்கள் மூட்டையாக கட்டி இருக்கும் இந்த வைரக்கற்களை நாங்கள் எப்படி வெளி கொண்டு செல்வதாம்!'' என்றான் குணாளன்.''ஒருமுறை கட்டடம் மூடினால், பின்னர் திறக்காது. இது பொக்கிஷ ரகசியம் தெரியும் வரை திறக்காது. பொக்கிஷ ரகசியம் தெரிந்து விட்டாலோ எல்லாமே பொக்கிஷம்தான். அதனால் அந்த மூட்டைகளை அடுத்த கட்டடத்துக்கு சுமந்து வாருங்கள்!'' என்றார் மயன்.'இவர் ஏதோ சூசகமாக அல்லவா பேசுகிறார். ஒன்றும் புரியவில்லையே!' என்று தளபதி குணாளனையும், குணாளன் தளபதியையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டர்.''எல்லாம் புரிய வேண்டிய நாழிகையில் புரியும். தெரிய வேண்டிய நாழிகையில் தெரியும். சரி நாழிகை ஆகிவிட்டது. அடுத்த கட்டடம் வரப்போகிறீர்களா இல்லை இத்துடன் திரும்பி செல்கிறீர்களா?''''அப்படி என்றால் பொக்கிஷ அறை மறுபடியும் திறக்குமா? தாங்கள்தானே சற்று முன் திறக்காது என்று கூறினீர்கள்!'' என்றான் குணாளன்.''கதவுகள் திறக்காமலே உங்களை கொண்டு போய் சேர்க்க இங்கே பல சுரங்க பாதைகள் இருக்கின்றன. ஆனால், அது இப்போது கூறுவதற்கு சாத்தியம் இல்லை. வாருங்கள். கதவுகள் மூடப்போகின்றன!'' மயன் துரிதப்படுத்தினார்.குணாளனும், தளபதியும் வீரர்களும் வேகமாக வந்தனர்.அதே சமயம், சின்னதம்பி தன் சிறுவர் பட்டாளத்துடன் மாணிக்க கற்கள் குவியலின் கடைசிப் பகுதிக்கு வந்து விட்டான். ஆனால், யாரும் எதையும் எடுக்கவில்லை. அப்போது பெரியவர் பேசினார்.''சிறுவர்களே இந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டீர்கள். தங்கம் போயிற்று; வைரம் போயிற்று; இப்போது மாணிக்கமும் போகப் போகிறதே. உங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்களை தவற விடுகிறீர்களே. இது புத்திசாலித்தனமா?'' வேகமாக கேட்டார் பெரியவர்.''அய்யா எங்களைப் பொருத்த மட்டில் இதெல்லாம் பொக்கிஷமே இல்லை. இந்த பொக்கிஷ மலையில் உண்மையான பொக்கிஷம் எங்கோ மறைந்திருக்கிறது. அதைத்தான் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். பொன்னும், மணியும் மாணிக்கமும் உண்டு கொழுத்தவன் உடலுக்கு வேண்டுமானால் அணிகலன்களாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அதெல்லாம் வெறும் விதவித வண்ணக்கற்களே,'' என்றான் வாண்டு.''ஆம். நாங்களும் இதை முழுவதுமாக ஆமோதிக்கிறோம்!'' என்றான் சின்னதம்பியும், செங்கதிர் செல்வனும்.''ஆம் ஆம்! எங்கள் கருத்தும் அதுவே!'' என்று வருண் கூறி கை தூக்க, மற்ற சிறுவர்களும், ''ஆம். ஆம். எங்கள் கருத்தும் அதுவே!'' என்றபடி கையை தூக்கி வாண்டுவின் கருத்தை ஆமோத்தினர்.பெரியவர் மன மகிழ்வுடன் சிரித்தார்.''சரி உங்கள் இஷ்டம். எனக்கென்ன கஷ்டம். வாருங்கள் இப்போது பொக்கிஷத்தின் அடுத்த கட்டடம் வரப்போகிறீர்கள். இப்பவாவது பொக்கிஷத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் ஏற்று கொள்ளுங்கள்,'' என்று கூறி முடிக்க முத்துக்களால் கோர்க்கப்பட்ட பெரும் கதவுகள் திறந்தன. அதே சமயம் மாணிக்க கதவுகள் மூடிக்கொண்டன.''ஆ... முத்து. என்ன அழகு. இந்த இடமே ஆயிரம் நிலவுகள் உதித்தால் என்ன ஒளி உண்டாகுமோ அவ்வளவு ஒளியுடன் பிரகாசிக்கிறதே,'' என்ற சிறுவர்கள் ஒவ்வொரு முத்தையும் பார்த்து ரசித்தனர்.மாணிக்க கதவுகள் திறந்ததும் தளபதியும், குணாளனும் நல்லான் மற்றும் வீரர்களுடன் பிரவேசித்தனர்.பச்சை பசேல் என்று இருக்கும் அந்த பெரும் மாளிகைக்கூடத்தை கண்டு மெய் மறந்தபடி இருவரும் நின்றனர். அதற்குள் வீரர்கள் தூக்க முடியாமல் தூக்கி வந்த மூட்டையை பிரித்து, அதற்குள் சில மாணிக்க கற்களை போட்டு கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பச்சை வண்ணத்துக்கே மாறியிருந்தனர். இதை கண்டு அனைவரும் அதிசயிக்க தளபதிக்கு புல்லரித்தது. தன்னை ஒருமுறை பார்த்து வியந்தே விட்டான் குணாளன்.''ஏன் தளபதியாரே எனக்கு ஒரு சந்தேகம்!'' என்றான் குணாளன்.''என்ன கேள். சீக்கிரமாக கேள். நாழி இல்லை. நாம் அத்தனை மாணிக்க கட்டிகளையும் எடுக்க வேண்டும்,'' என்றான் தளபதி.''அதில் தான் சிக்கலே...''''நீ என்ன சொல்கிறாய்?'' தளபதி தலையை உயர்த்தி குணாளனை பார்த்தான்.''ஆம் தளபதியாரே. இவ்வளவையும் நாம் எப்படி அள்ளி எடுத்து செல்வது. இதுவோ எடுக்க எடுக்க குறையாத பொக்கிஷமாக அல்லவா இருக்கிறது. நம்மிடமோ எடுத்துச் செல்வதற்கான பைகளோ, சாக்குகளோ இல்லை. இந்த பொக்கிஷ மலையில் இன்னும் என்ன என்ன பொக்கிஷம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. அதனால் நாம் ஏதாவது குறுக்கு வழி கண்டு அல்லது அந்த மயன் கூறிய சுரங்கபாதையை கண்டு அத்தனை செல்வத்தையும் அவ்வழியே எடுத்து செல்ல வேண்டும். பொழுது விடிந்தால் பவுர்ணமி. மேலை நாட்டினர் படை பலத்துடன் வருவர். அவனுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அத்தனையையும் கொள்ளை அடித்து சென்று விடுவான். அதுதான் புரியாமல் யோசிக்கிறேன்,'' என்றான் குணாளன்.- தொடரும்...பூரணி