உண்மை நட்பு!
லிங்குவும், அங்குவும் மிதிலாபுரத்தில் வசித்து வந்தனர். இருவரும், 9ம் வகுப்பு படித்து வந்தனர். நட்புடன் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வர்.அன்று, பள்ளிக்கு விடுமுறை. குளிப்பதற்காக, குளம் நோக்கி நடந்தனர். வழியில் பிடித்த திரைப்பட நடிகர்களை பற்றி விவாதித்தபடி சென்றனர். பிடிக்காத நடிகரை தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. பிடித்த நடிகரை, விமர்சித்ததை பொறுக்காமல், அங்கு கன்னத்தில் அறைந்தான் லிங்கு. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனான். கண்களில் நீர் திரண்டது.வருத்தத்துடன், எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தான் அங்கு.வழியில் வட்டப்பாறை ஒன்று இருந்தது; செம்மண் கட்டியால் அதில், 'இன்று, என் நண்பன், கன்னத்தில் அறைந்தான்' என எழுதினான் அங்கு.'திருப்பி அடிக்க முடியாத குறையை, எழுதி தீர்க்கிறான்' என எண்ணி கடும் கோபம் அடைந்தான் லிங்கு.மறுநாள் -இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்; இடையே, 10 அடி துாரத்தில் பின்னால், மிதிவண்டியை மிதித்து வந்தான் அங்கு. எங்கிருந்தோ வந்த தெருநாய், அவன் மிதிவண்டியில் மோதியது; தடம் புரண்டதால் சாய்ந்தான். வலியால் அலறல் கேட்டு, திரும்பி பார்த்தான் லிங்கு.காயம்பட்டு கிடந்த அங்குவை கண்டு, பதறியபடி ஓடி வந்தான்.காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது; கைக்குட்டையால் கட்டு போட்டான் லிங்கு. பின், விழுந்து கிடந்த மிதிவண்டியை ஒழுங்கபடுத்தி ஓரமாக நிறுத்தி, ''என் மிதிவண்டியில் ஏறு... உடனே, காயத்துக்கு மருந்து போட டாக்டரிடம் போகலாம்...'' என்றான் லிங்கு.சற்று தயக்கம் காட்டினான் அங்கு.''என்னடா யோசிக்கிற...''கைகொடுத்து துாக்கினான் லிங்கு.மிதிவண்டியில் அமர்ந்தான். சண்டையும், கோபமும் மறைந்தன.சில நாட்களுக்குப் பின் -மதிய வேளையில் இருவரும் அதே குளத்துக்கு சென்றனர். வழியில் அந்த பாறையை கடந்த போது, 'அடிப்பட்ட போது உதவினான் நண்பன்' என்று செதுக்கினான் அங்கு.அதைப் பார்த்ததும், ''அன்று மண்ணாங்கட்டியால் எழுதினாய்; இன்று கல்லால் செதுக்குகிறாயே...'' என்றான் லிங்கு.''நண்பன் செய்தது தவறு... அது மன்னிக்க வேண்டியது; மண்ணாங்கட்டியால் எழுதினால் மழை, காற்றால் அழிந்து போகும். ஆனால், கல்லில் செதுக்கினால் காலத்திற்கும் நிற்கும்; மன்னித்து விடுவது நட்புக்கு அழகு; அதை தான் செய்தேன்...'' என்றான் அங்கு.மனம் குளிர்ந்து, ''மன்னிச்சிடு... யாரோ நடிகருக்காக, உன்னை அடித்தது தவறு. இதை உணர வைத்தாய்; இதுபோல் இனி செய்ய மாட்டேன்...'' என்றான் லிங்கு.நட்புடன் கைகோர்த்தபடி குளம் நோக்கி நடந்தனர்.குழந்தைகளே... மன்னிப்பது மாபெரும் மனித பண்பு!ஜி.சுந்தரராஜன்