உள்ளூர் செய்திகள்

மாற்றத்துக்கு வழி!

கோவை மாவட்டம், கிழக்கலுார், எஸ்.எம்.ஹெச்., உயர்நிலைப் பள்ளியில், 1961ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்... வகுப்பாசிரியை சாரதாம்பாள், 'குளித்து, சுத்தமான ஆடை அணிந்து வர வேண்டும். சுத்தம் சோறிடும்...' என்று மாணவ, மாணவியரை ஒவ்வொரு நாளும் அறிவுறுத்துவார். வகுப்பு தோழி அகிலா நன்றாக படிப்பாள். தயங்காமல் உதவிகள் செய்வாள். அவளுக்கு, மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருக்கும். அதை, சீருடையில் துடைத்துக் கொள்வாள். கைக்குட்டை உபயோகிக்க மாட்டாள். இதை கவனித்த வகுப்பாசிரியை, 'முகத்தில் அழுக்கை சுத்தம் செய்ய கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். அணிந்திருக்கும் உடையில் துடைக்க கூடாது. அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பாகி விடும்...' என்று அறிவுரைத்தார். அதை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் தோழி.தொடர்ந்து கண்காணித்த ஆசிரியை, ஒருநாள் இரண்டு புதிய கைக்குட்டைகள் வாங்கி அவளிடம் கொடுத்தார். வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டு அவற்றை உபயோகிக்க துவங்கினாள்.என் வயது, 73; குடும்பத்தலைவியாக இருக்கிறேன். பலமுறை அறிவுரைத்தும் தவறை திருத்தாத மாணவியை கண்டிக்காமல், செயலால் மாற்றிய ஆசிரியையை மனதில் தாங்கியுள்ளேன். - பி.லட்சுமி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !