பெயரில் என்ன இருக்கிறது!
சித்தாலப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார் விவசாயி மண்ணாங்கட்டி. அவரது பெற்றோருக்கு, நிறைய குழந்தைகள் பிறந்தன; ஒன்று கூட நிலைக்கவில்லை. 'செல்லப் பெயர்களாக வைப்பதால் தான், எல்லா குழந்தைகளும் இறந்து விடுகின்றன' என எண்ணி, கடைசியில் பிறந்த குழந்தைக்கு, மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தனர்.அவன் வளர்ந்த போது, 'மண்ணாங்கட்டி... மண்ணாங்கட்டி...' என ஊரார் அழைப்பது வேதனையாக இருந்தது. 'உலகில், எவ்வளவோ நல்ல பெயர் இருக்கும் போது, இதை வைத்து விட்டனரே' என்று நினைத்து, எப்படியாவது பெயரை மாற்ற தீர்மானித்தான் மண்ணாங்கட்டி. அவ்வூருக்கு சாமியார் ஒருவர் வந்தார்; ஊர்க்கோடி ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரிடம் குறைகளை கூறினர் மக்கள்; அவர்களின் குறை தீர்வதற்காக இறைவனிடம் வழிபட்டார் சாமியார்.அந்த சாமியாரிடம் சென்றான் மண்ணாங்கட்டி. அவனிடம், 'மகனே... உன் குறை என்ன...' என்று கேட்டார்.'சுவாமி... எனக்கு மண்ணாங்கட்டி என்று பெயரிட்டனர்; அது அப்படியே நிலைத்து விட்டது. பலரும் கிண்டல் செய்கின்றனர். இது வேதனை தருகிறது. தாங்கள், எனக்கு ஒரு நல்ல பெயர் சூட்ட வேண்டும்...' 'மகனே... நானாக ஒரு பெயர் வைப்பதை விட, நீயே, ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்து என்னிடம் வா. அந்த பெயரையே சூட்டி, ஆசிர்வாதம் செய்கிறேன்...' என்றார் சாமியார். கடைத்தெருவுக்கு சென்றான் மண்ணாங்கட்டி; அங்கு ஒரு காட்சியைக் கண்டான்.கடையில் பிச்சை கேட்டு நின்றான் ஒருவன்.அவனிடம், 'உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லயா... மாடு மாதிரி இருந்துட்டு, பிச்சையெடுக்க வந்துட்ட! போ... போ...' என அடிக்காத குறையாக விரட்டினார் கடைக்காரர். இதை பார்த்த வழிப் போக்கர் ஒருவர், 'பேரு தான் தருமராசன்! பிச்சைக்காரர்களுக்கு, ஒரு பைசா கூட கொடுக்க மாட்டான்...' என கடைக்காரரை திட்டியபடி சென்றார். எதிரே வந்தார் பார்வையற்றவர். மண்ணாங்கட்டியிடம், 'சாமி, இரண்டு கண்களும் தெரியாது; தருமம் செய்யுங்களேன்...' என்றபடியே, தகர குவளையை, அவன் முன் நீட்டினான்.அதில் சில்லரை காசுகளை போட்டு, 'உன் பெயர் என்ன...' என்று கேட்டான் மண்ணாங்கட்டி.'என் பெயர் கண்ணாயிரம்...' என்றான் பிச்சைக்காரன். 'அட பாவமே... பெயர் தான் கண்ணாயிரம்; இரண்டு கண்ணும் இல்லையா' என எண்ணியபடியே நடந்தான் மண்ணாங்கட்டி. எதிரே, ஒரு பிணத்தை, நான்கு பேர் துாக்கி சென்று கொண்டிருந்தனர். 'இறந்து போனவர் யார்...' என்று கேட்டான் மண்ணாங்கட்டி. 'இவரைத் தெரியாதா உனக்கு, இவர்தான் சிரஞ்சீவி...' 'சிரஞ்சீவி என்று பெயர் வைத்தால் கூட இறந்து விடுவரா...'வியப்புடன் கேட்டான் மண்ணாங்கட்டி.'பைத்தியக்காரா... பெயரில் என்ன இருக்கிறது, அழகேசன் என்று பெயர் இருக்கும்; பார்த்தால் அவலட்சணமாக இருப்பான். இதெல்லாம் சகஜம்...' என்று கூறி சென்றான் வழிப்போக்கன்.நேராக சாமியாரிடம் சென்றான் மண்ணாங்கட்டி. 'மகனே... நல்ல பெயரை தேர்ந்தெடுத்து விட்டாயா...' 'சுவாமி... நிறைய பெயர்கள் கிடைத்தன; ஆனால், ஒன்று கூட பிடிக்கவில்லை. பெயருக்கும், குணத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை...' என்றான் மண்ணாங்கட்டி.'இதை நீ தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு கூறினேன். செய்கிற செயல் நல்லதாக இருந்தால், பெயரை பொருட்படுத்த மாட்டார்கள். குணம் கெட்டதாக இருந்தால், எவ்வளவு நல்ல பெயராக வைத்திருந்தாலும், மக்கள் மதிக்க மாட்டார்கள். அதனால், பெயரைப் பொருட்படுத்தாதே... குணத்தில் சிறந்து விளங்கு; மக்கள் உன்னை புகழ்வர்...'நிதானமாக அறிவுரைத்தார் சாமியார்.குழந்தைகளே... செயல்தான் சிறப்பு என்பதை உணர்ந்து, நற்செயல் பழகுங்கள்.- கண்ணப்பன் பதிப்பகம்