உள்ளூர் செய்திகள்

இளம் வில் வித்தை வீரர்!

திருவள்ளூர் மாவட்டம், பூங்காநகர் பகுதியிலுள்ள தன் வீட்டில், தீவிரமாக வில் பயிற்சி செய்துவரும் அந்த வீரரின் பெயர், டினு கிளன். காஞ்சிபுரம் அருகே, உறைவிடப் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.'ஆரம்பத்தில், திருவள்ளூரிலுள்ள பள்ளி ஒன்றில் படித்தேன். அப்போது, சக மாணவர்கள் வில் வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும், பயிற்சியாளர் கோபகுமாரிடம் கேட்டேன். 'உடனே என் கையில், வில்லை கொடுத்து, 'டார்கெட்' போர்டில் அம்பை விட சொன்னார். நான் அம்பு செலுத்திய விதத்தை பார்த்ததும், தொடர்ந்து பயிற்சி அளித்தார்.'பின், ஆறாம் வகுப்பிற்காக, 2013ல் சுங்குவார் சத்திரத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் சேர்ந்தேன். 'அங்கும் வில்வித்தை பயிற்சியை தொடர்ந்து கற்றேன். 'டார்கெட்' போர்டில் அம்பு விடும் பாணியை மெச்சிய கோச் மணிவாசகம், அண்ணா நகரில் அவர் நடத்தி வந்த பயிற்சி வகுப்பில் சேர்த்து பயிற்சி அளித்தார். 'கடந்த, இரண்டு ஆண்டுகளாக நீலாகிருஷ்ணன் என்பவர், தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்' என்றார் டினு கிளன்.தன் மகனின் ஆர்வத்தை பார்த்த அவரது பெற்றோர், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள வில், அம்பை வாங்கி கொடுத்துள்ளனர். இதன் மூலம் வீட்டிலும் பயிற்சி மேற்கொண்ட டினு, 2013ம் ஆண்டு முதல், பதக்க வேட்டைக்கு புறப்பட்டார்.சென்னையில் நடைபெற்ற, தேசிய அளவிலான போட்டியில், 200 வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர். இதில், மூன்றாம் இடம் பெற்று, வெண்கலம் வென்றார். தொடர்ந்து, 2014ல் நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று, தங்க பதக்கம் பெற்றார். இதில், திருச்சியில் நடந்த மூன்று பிரிவிலும் தங்கம் வென்று, 'ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்' பட்டம் பெற்று, சக வீரர்களை அசத்தி உள்ளார் டினு. 'கடந்த ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஜார்கண்ட், அசாம் மாநிலங்களில் நடந்த வில் வித்தை போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் பெற்றேன். கடந்த, 2015ல் மாநில அளவில், 17 வயது மாணவர்களுக்காக, சென்னையில் நடந்த போட்டியில், பள்ளி சார்பில் பங்கு பெற்று, முதல் பரிசான தங்க பதக்கம் பெற்றேன்...' என பெருமிதமாக கூறினார் டினு.மேலும், கடந்த 2016ல், மத்திய பிரதேசம் ஜபல்பூரில் நடந்த, தேசிய அளவிலான போட்டியில், 250 பேர் பங்கேற்றனர். இதில், வெள்ளி, வெண்கலம் என, இரண்டு பதக்கங்களை பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இப்படி, 16 வயதில், 22 பதக்கங்களை குவித்த டினு கிளனின் லட்சியம், ஒலிம்பிக் போட்டியில் கலந்து, இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்று தருவதுதான்.டினு கிளனின் லட்சியம் வெல்ல வாழ்த்த விரும்புவோர், 95249 91111 என்ற மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.- என்.சரவணன், திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !