உள்ளூர் செய்திகள்

ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு அதிசயம்!

கண்ணுக்கெட்டும் உயரம் வரை, கட்டடங்களை கட்டி, உலக நாடுகளை பிரமிக்க வைப்பதில், வளைகுடா நாட்டுக்காரர்களை, யாராலும் மிஞ்ச முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், துபாயில் புர்ஜ் கலிஜியா என்ற, 828 மீட்டர் உயரமுள்ள, மிகப் பெரிய கட்டடத்தை கட்டி, அசத்தினர். உலகின் மிக உயரமான சொர்க்கம் என, இந்த கட்டடம் வர்ணிக்கப்படுகிறது.இப்போது, இதை மிஞ்சும் வகையில், மற்றுமொரு பிரமாண்டமான பாலைவன சொர்க்கம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் <உருவாகப் போகிறது. இந்த புதிய கட்டடத்துக்கு, 'கிங்டம் டவர்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் என்ன தெரியுமா... 1,000 மீட்டர். இந்த கட்டடத்தின் உச்சிக்கு, 'லிப்ட்'டில் பயணித்தாலும், 12 நிமிடங்கள் ஆகும்.இந்த பிரமாண்ட கட்டடத்தில், நான்கு ஆடம்பர சொகுசு ஓட்டல்கள், அபார்ட்மென்ட்கள் மற்றும் உச்சியில் இருந்து, ஜெட்டா நகரத்தின் அழகை ரசிக்கும் வகையிலான, கண்காணிப்பு கோபுரம் ஆகியவையும் அமையவுள்ளன.இதற்காக, 5,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துவங்கி விட்டாலும், முற்றிலும் முடிவடைய, ஐந்து ஆண்டுகள் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் தான், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப் போகிறது. 'கட்டடத்தின் உயரம், 1,000 மீட்டர் என, தற்போது ஒரு மதிப்பீட்டுக்காக கூறியுள்ளோம். ஆனால், உயரம் பற்றிய விஷயங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன், உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது...' எனக் கூறி, பிரமிக்க வைக்கின்றனர், சவுதிக்காரர்கள்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !