திரையில் வரையும் அம்மன்!
குற்றாலத்தில், குற்றால நாதர் கோவிலில், நடராஜரை சித்திரமாக வரைந்திருப்பர். இது, நிரந்தர சித்திரம். தஞ்சாவூர் அருகேயுள்ள புன்னைநல்லுார் மாரியம்மனை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, தற்காலிகமாக திரையில் வரைந்து வழிபடும் வழக்கம் இருக்கிறது.போர் வெற்றிக்காக, காளியை வழிபட்டு வந்தனர், சோழ மன்னர்கள். இவர்கள், தஞ்சையைச் சுற்றி எட்டு திசைகளில், அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். இதில், கிழக்கு பக்கம் அமைக்கப்பட்ட சக்தியே, 'புன்னைநல்லுார் மாரியம்மன்!' கடந்த, 1680ல், தஞ்சையை ஆண்ட, வெங்கோஜி மகாராஜா, தல யாத்திரை செல்லும்போது, சமயபுரத்தில் தங்கினார். அன்றிரவு, அரசரின் கனவில் தோன்றிய, அம்பிகை, 'புன்னைமரக் காட்டில் புற்று வடிவில் இருக்கிறேன்; என்னை வழிபடு...' எனக் கூறி மறைந்தாள். அரசரும், கனவில் குறிப்பிட்ட இடம் வந்து, புற்று வடிவில் இருந்த அம்மனை தரிசித்து, மேற்கூரை அமைத்தார். 'புன்னைநல்லுார்' என பெயரிட்டு, அந்த கிராமத்தை, கோவிலுக்கு தானமாக வழங்கினார்.துளஜா என்ற ராஜாவின் மகளுக்கு, அம்மை ஏற்பட்டு, பார்வை போனது. இவரது கனவில், குழந்தை வடிவில் தோன்றிய அம்பிகை, புன்னைநல்லுார் வந்து வழிபடும்படி கூறினாள். மன்னரும் அதன்படி செய்யவே, மகளுக்கு பார்வை கிடைத்தது. சரபோஜி மன்னர் காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. மராட்டிய மன்னர் சிவாஜி, இக்கோவிலுக்கு மூன்றாவது திருச்சுற்றும்; ராணி காமாட்சியம்பா பாயி சாகேப், உணவுக்கூடம் மற்றும் வெளி மண்டபமும் கட்டி கொடுத்தனர். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி, புற்று வடிவில் இருந்த அம்மனுக்கு, மாரியம்மன் வடிவம் கொடுத்து, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்தார்.மூலவர், புற்று மண்ணால் ஆனதால், அபிஷேகத்துக்கு பதிலாக, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, தைலக்காப்பு - அதாவது, மூலிகை எண்ணெய் பூசி பாதுகாப்பர். அப்போது, அம்மனை ஒரு வெண்திரையில் வரைந்து, 48 நாட்கள் பூஜை நடத்துவர்.தைலக்காப்பில் இருக்கும் காலத்தில், உஷ்ணத்தால் பாதிக்காமல் இருக்க, இளநீர், தயிர் நைவேத்யம் செய்யப்படும். அத்துடன், மூலஸ்தானத்தை சுற்றியுள்ள உள்தொட்டி, வெளி தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும்.கடைசியாக, மே, 2015ல், இந்த பூஜை நடந்தது. அடுத்த பூஜை, 2020 மே மாதம் துவங்கி, ஜூன் வரை நடத்தப்படும். கட்டி, பரு உள்ளோர், இங்குள்ள குளத்தில், வெல்லம் வாங்கி போடுவர். குளத்தில் வெல்லம் கரைவது போல, இது கரைந்து விடும் என்பது நம்பிக்கை. திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி, ஆவணி ஞாயிற்றுக்கிழமை, அம்மனை வழிபடுவர்.இந்த கோவில், காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கும். தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலையில், 6 கி.மீ., துாரத்தில் உள்ளது.தி. செல்லப்பா